தோனியின் ஓய்வு முடிவு 130 கோடி மக்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான தோனி, கடந்த 15 ஆம் தேதி யாரும் எதிர்பாரத வகையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டார்.
தோனியின் ஓய்வு அறிவிப்பை அடுத்து அவரது எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்று அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்திய பிரதமர் மோடி, தோனிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் .அதில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: “ உங்களின் ஓய்வு முடிவு 130 கோடி மக்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்று கொடுத்த தருணம் இந்தியர்களால் எப்போதும் மறக்கப்படாது.
சிறிய நகரத்தின் பிறந்து தேசத்தின் அடையாளமாக மாறியவர் தோனி. கடந்த 15 ஆண்டுகளில் இந்திய அணிக்கு மிகச்சிறந்த பங்களிப்பை ஆற்றியுள்ளீர்கள். வெற்றியோ, தோல்வியோ அனைத்து நேரத்திலும் அமைதியை கடைபிடித்து சிறந்து விளங்கியவர் தோனி” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.