ஐபிஎல் கிரிக்கெட் தொடர்: ஆர்சிபி அணியின் கேப்டனாக விராட் கோலி நீடிப்பாரா?


ஐபிஎல் கிரிக்கெட் தொடர்: ஆர்சிபி அணியின் கேப்டனாக விராட் கோலி நீடிப்பாரா?
x
தினத்தந்தி 21 Aug 2020 10:29 AM GMT (Updated: 21 Aug 2020 10:29 AM GMT)

ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி நீக்கப்படுவாரா? என்ற கேள்விக்கு அந்த அணியின் சேர்மன் பதிலளித்துள்ளார்.

பெங்களூரு,

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர்  19 ஆம் தேதி துவங்குகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற உள்ளது. இதற்காக உயிரி பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (ஆர்சிபி)  அணி வீரர்கள் உள்பட தொடரில் பங்கேற்கும் அணி வீரர்கள் துபாய் புறப்பட்டுள்ளனர். 

ஐபிஎல் தொடரில் இதுவரை ஒருமுறை கூடாத  பெங்களூரு அணி நிகழ் ஆண்டாவது கோப்பையை வெல்லுமா? என்பது ரசிகர்களின் ஏக்கமாக உள்ளது. விராட் கோலி, டி வில்லியர்ஸ் உள்ளிட்ட  நட்சத்திர பட்டாளங்களை கொண்டிருந்தாலும்,  தொடர்ந்து அந்த அணி சொதப்பி வருகிறது. இதனால், கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி நீக்கப்படுவாரா? என்ற கேள்விகளும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழாமல் இல்லை. 

கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி நீக்கப்படுவாரா? என்று ஆர்சிபி அணியின் சேர்மன் சஞ்சீவ் சுரிவாலாவாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இக்கேள்விக்கு பதில் அளித்த சஞ்சீவ் சுரிவாலால்,  ”விராட் கோலிக்கு அதிக அளவு ரசிகர்கள் உள்ளனர். விராட் கோலியை ரசிகர்கள் நேசிக்கிறார்கள், நாங்களும் நேசிக்கிறோம். போட்டியில் சில நேரம் வெற்றி கிடைக்கும், சில நேரம் தோல்வி கிடைக்கும். ஆட்டம் என்பது இதுதான். ஆனால், ஒரு வீரரின் முந்தைய சாதனைகள் என்ன என்பதையும் நாம் பார்க்க வேண்டும்” என்றார். 

விராட் கோலி கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் ஆர்சிபி அணியின் கேப்டனாக உள்ளார். விராட் கோலி தலைமையில்,  அந்த அணி, ஐபிஎல் போட்டியில் ஒரே ஒருமுறை இறுதிப்போட்டி வரை சென்றது. அதன்பிறகு அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story