கொரோனா பாதிப்பு சீரானதும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டி தொடங்கப்படும் கங்குலி தகவல்


கொரோனா பாதிப்பு சீரானதும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டி தொடங்கப்படும் கங்குலி தகவல்
x
தினத்தந்தி 23 Aug 2020 12:30 AM GMT (Updated: 23 Aug 2020 12:30 AM GMT)

கொரோனா பாதிப்பு பிரச்சினை சீரானதும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியை தொடங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய கிரிக்கெட் வாரியம் மேற்கொள்ளும்.

புதுடெல்லி,

உள்நாட்டு கிரிக்கெட் போட்டி வழக்கமாக ஆகஸ்டு மாதம் தொடங்கும். கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டுக்கான உள்நாட்டு போட்டிகளை எப்போது தொடங்குவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் எழுதியிருக்கும் கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா பாதிப்பு பிரச்சினை சீரானதும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியை தொடங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய கிரிக்கெட் வாரியம் மேற்கொள்ளும். உள்நாட்டு போட்டியில் ஈடுபடும் வீரர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருடைய சுகாதாரமும், பாதுகாப்பும் மிகவும் முக்கியமானதாகும். எனவே நாங்கள் எல்லா அம்சங்களையும் தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறோம். அடுத்த சில மாதங்களில் கொரோனா பாதிப்பு சீரடைந்து பாதுகாப்பான சூழ்நிலையில் கிரிக்கெட் போட்டிகளை தொடங்க முடியும் என்று நம்புகிறோம்.

இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் இந்திய அணியின் வருங்கால போட்டி அட்டவணைகள் பூர்த்தி செய்யப்படும். இந்த ஆண்டு இறுதியில் இந்திய அணி, ஆஸ்திரேலியா சென்று விளையாடும். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இங்கிலாந்து அணி நமது நாட்டுக்கு வந்து ஆடுகிறது. இதனை அடுத்து ஐ.பி.எல். போட்டி ஏப்ரல் மாதத்தில் தொடங்கி நடைபெறும். 2021-ம் ஆண்டில் 20 ஓவர் உலக கோப்பை போட்டியும், 2023-ம் ஆண்டில் 50 ஓவர் உலக கோப்பை போட்டியும் இந்தியாவில் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story