காலிஸ், லிசா, ஜாகீர் அப்பாசுக்கு ஐ.சி.சி. கவுரவம்


காலிஸ், லிசா, ஜாகீர் அப்பாசுக்கு ஐ.சி.சி. கவுரவம்
x
தினத்தந்தி 24 Aug 2020 12:33 AM GMT (Updated: 24 Aug 2020 12:33 AM GMT)

காலிஸ், லிசா, ஜாகீர் அப்பாசுக்கு ஐ.சி.சி. கவுரவம் செலுத்தியுள்ளது.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களை ‘ஹால் ஆப் பேம்’ என்ற பட்டியலில் சேர்த்து கவுரவித்து வருகிறது. இந்த வகையில் பாகிஸ்தான் முன்னாள் பேட்ஸ்மேன் ஜாகீர் அப்பாஸ், தென்ஆப்பிரிக்க முன்னாள் ஆல்-ரவுண்டர் ஜாக்ஸ் காலிஸ், ஆஸ்திரேலிய பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் லிசா ஸ்தலேகர் ஆகியோர் இந்த பட்டியலில் நேற்று புதிதாக சேர்க்கப்பட்டனர். இதற்கான நிகழ்ச்சி ஆன்-லைன் மூலம் நடந்தது. 44 வயதான காலிஸ் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டியில் 10 ஆயிரத்திற்கும் மேல் ரன்களும், 250-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளும் வீழ்த்திய ஒரே வீரர் ஆவார். அவர் கூறுகையில் ‘நான் விளையாடிய போது வெற்றி மட்டுமே குறிக்கோளாக இருந்ததே தவிர இது போன்ற பரிசு, பாராட்டுகளுக்காக ஆடியதில்லை. இருப்பினும் கிரிக்கெட்டில் சாதித்ததற்காக கிடைத்த இந்த அங்கீகாரம் மகிழ்ச்சியும், பெருமையும் அளிக்கிறது’ என்றார்.

இந்தியாவை பூர்விகமாக கொண்ட 41 வயதான லிசா ஸ்தலேகர் 2005 மற்றும் 2013-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் அங்கம் வகித்தவர் ஆவார். 73 வயதான ஜாகீர் அப்பாஸ் பாகிஸ்தான் அணிக்காக 78 டெஸ்ட் மற்றும் 62 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று இருக்கிறார். முதல்தர கிரிக்கெட்டில் 100-க்கும் அதிகமான சதங்கள் அடித்த ஒரே ஆசிய நாட்டவர், ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து 3 சதங்கள் அடித்த முதல் வீரர் போன்ற சிறப்புக்கு சொந்தக்காரர் ஆவார்.

2009-ம் ஆண்டு அறிமுகம் ஆன ‘ஹால் ஆப் பேம்’ பட்டியலில் இதுவரை 6 இந்தியர்கள் உள்பட 93 வீரர், வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு உள்ளனர். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் கடந்த பிறகு தகுதியானவர்களுக்கு இந்த கவுரவம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Next Story