இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: பாலோ-ஆனை தவிர்க்க பாகிஸ்தான் போராட்டம்


இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: பாலோ-ஆனை தவிர்க்க பாகிஸ்தான் போராட்டம்
x
தினத்தந்தி 24 Aug 2020 12:48 AM GMT (Updated: 24 Aug 2020 12:48 AM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாலோ-ஆனை தவிர்க்க பாகிஸ்தான் போராடியது.

சவுதம்டன்,

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 583 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 2-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 24 ரன்களுடன் தத்தளித்தது. மூன்று 3 விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கைப்பற்றினார்.

இந்த நிலையில் ‘பாலோ-ஆன்’ ஆபத்தை தவிர்க்க 384 ரன்கள் சேர்க்க வேண்டிய நெருக்கடியுடன் பாகிஸ்தான் அணியினர் 3-வது நாளான நேற்று பேட்டிங் செய்தனர். சிறிது நேரத்தில் ஆசாத் ஷபிக்கின் (5 ரன்) விக்கெட்டை ஆண்டர்சன் காலி செய்தார். இது டெஸ்டில் ஆண்டர்சனின் 597-வது விக்கெட்டாகும்.

இதன் பின்னர் கேப்டன் அசார் அலியும், பவாத் ஆலமும் சரிவை தடுக்க போராடினர். பவாத் ஆலம் 22 ரன்களில் கேட்ச் ஆனார். இதைத் தொடர்ந்து கேப்டன் அசார் அலியும், விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானும் கைகோர்த்து தேனீர் இடைவேளை வரை விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். அசார் அலி 44 ரன்கள் எடுத்த போது டெஸ்டில் 6 ஆயிரம் ரன்களை கடந்த 5-வது பாகிஸ்தான் வீரர் என்ற சிறப்பை பெற்றார். தனது 17-வது சதத்தையும் அவர் எட்டினார்.

அணியின் ஸ்கோர் 213 ரன்களாக உயர்ந்தபோது, ரிஸ்வான் 53 ரன்னிலும், அடுத்து வந்த யாசிர்ஷா 20 ரன்னிலும், ஷகீன் ஷா அப்ரிடி 3 ரன்னிலும் வெளியேறினர். 86 ஓவர் முடிந்திருந்த போது பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்திருந்தது. அசார் அலி 116 ரன்னுடனும், முகமது அப்பாஸ் ரன் ஏதும் எடுக்காமலும் ஆடிக் கொண்டிருந்தனர்.

Next Story