ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு? - சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் பிராவோ சிறப்பு பேட்டி


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு? - சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் பிராவோ சிறப்பு பேட்டி
x
தினத்தந்தி 26 Aug 2020 1:12 AM GMT (Updated: 26 Aug 2020 1:12 AM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்ற கேள்விக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் வெய்ன் பிராவோ பதில் அளித்தார்.

சென்னை,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் 36 வயதான வெய்ன் பிராவோ ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். தற்போது வெஸ்ட் இண்டீசில் நடந்து வரும் கரிபியன் பிரிமீயர் லீக் (சி.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட்டில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக களம் கண்டுள்ள வெய்ன் பிராவோ ‘தினத்தந்தி’க்கு சிறப்பு பேட்டி அளித்தார். இ-மெயில் மூலம் அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: டோனியின் ஓய்வு பற்றி உங்கள் கருத்து? அவரிடம் உங்களுக்கு பிடித்தமான அம்சங்கள் என்ன?

பதில்: டோனியின் ஓய்வு உண்மையில் ஒரு பெரிய விஷயமல்ல. அவர் மிகச்சிறந்த கிரிக்கெட் வாழ்க்கையை பெற்றிருந்தார். நிறைய சாதித்து காட்டினார், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே அவரை நேசித்தது. அது தான் முக்கியம். திறமையான பல இளம் வீரர்களுக்கு அவர் உதவியிருக்கிறார். அதன் மூலம் அவர்கள் இன்று நல்ல நிலையை எட்டியிருக்கிறார்கள். அவரிடம் எனக்கு பிடித்தமான விஷயம் எது வென்றால், தன்னடக்கமிக்க மனிதர்களில் ஒருவர். மிகவும் நேர்மையானவர். இந்த விளையாட்டை அளவுக்கு அதிகமாக நேசிக்கிறார். விளையாடும் போது மற்றவர்களையும் சிறப்பாக செயல்பட ஊக்கப்படுத்துகிறார்.

கேள்வி: சி.பி.எல். போட்டியில் உங்களது செயல்பாடு எப்படி இருக்கிறது? சென்னை அணியுடன் எப்போது இணைகிறீர்கள்?

பதில்: எப்போதுமே நான் எனது தனிப்பட்ட சாதனைகள், செயல்பாட்டை உற்றுநோக்குவதில்லை. ஒரு அணியாக எப்படி விளையாடுகிறோம் என்பதைத் தான் பார்ப்பேன். எந்த ஒரு தொடரில் பங்கேற்றாலும் வெற்றிக்காக மட்டுமே ஆடுவேன். சி.பி.எல். கிரிக்கெட்டில் இந்த சீசனில் இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடி 3-லிலும் வெற்று பெற்று முதலிடம் வகிக்கும் நாங்கள் அதை தொடர்ந்து தக்கவைக்கும் முனைப்புடன் உள்ளோம். கடந்த சீசனில் தோல்வியை தழுவியதால் வெற்றிக்கு உதவிட வேண்டும் என்ற உத்வேகத்துடன் இருக்கிறேன். சி.பி.எல். போட்டி செப்டம்பர் 10-ந்தேதி நிறைவு பெறுகிறது. அனேகமாக செப்.11 அல்லது 12-ந்தேதி டிரினிடாட்டில் இருந்து அமீரகம் புறப்பட்டு சென்னை அணியுடன் இணைவேன்.

கேள்வி: இந்த ஐ.பி.எல்.-ல் மகுடம் சூடும் வாய்ப்பு எந்த அணிக்கு இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்சுக்கு சவாலாக திகழும் அணி எது?

பதில்: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எல்லா அணிகளுமே சென்னை சூப்பர் கிங்சுக்கு சவாலானவை தான். இருப்பினும் மும்பை இந்தியன்ஸ் தான் சென்னை அணிக்கு எப்போதும் கடினமான அணியாக இருந்து வருகிறது. ஐ.பி.எல். வரலாற்றை புரட்டிப்பார்த்தால் மும்பை இந்தியன்ஸ் எப்படிப்பட்ட கடினமான எதிரணி என்பது தெரியும். ஆனால் ஐ.பி.எல்.-ல் எல்லா அணிகளும் சிறந்தவை தான். அனைத்து அணிகளையும் சென்னை சூப்பர் கிங்ஸ் மதிக்கிறது. இதே போல் மற்ற அணிகளும் சென்னை அணி மீது மதிப்பும், மரியாதையும் வைத்து உள்ளன. இது கடும் போட்டியும், சவாலும் நிறைந்த தொடர். எந்த அணியாலும் ஜெயிக்க முடியும்.

கேள்வி: மைதானத்தில் ரசிகர்கள் இன்றி விளையாடுவது குறித்து....?

பதில்: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 50-60 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவோம். ஆனால் இப்போது அதற்கு சாத்தியமில்லை. ரசிகர்கள் இல்லாவிட்டாலும் தீவிரத்தன்மையும், கிரிக்கெட் ஆட்டத்தின் தரமும் உயர்ந்த நிலையிலேயே இருக்கும் என்று நினைக்கிறேன். உலகம் முழுவதும் டி.வி. மூலம் இந்த போட்டியை கோடிக்கணக்கான ரசிகர்கள் பார்க்கப்போகிறார்கள். அதனால் ரசிகர்கள் இல்லாதது கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு பிரச்சினையாக இருக்காது.

கேள்வி: உங்களது வருங்காலத் திட்டம் என்ன?

பதில்: எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பது யாருக்குமே தெரியாது. 2019-ம் ஆண்டில், 2020-ல் குறிப்பிட்ட இலக்குகளை அடைய திட்டமிட்டோம். ஆனால் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது (கொரோனா பாதிப்பு) என்பதை பாருங்கள். என்னை பொறுத்தவரை இப்போது எந்த பாதிப்பும் இன்றி இருக்க வேண்டும். அது தான் முக்கியம். ஒவ்வொரு நாளும் என்னையும், குடும்பத்தினரையும் பாதுகாப்பான சூழலில் வைத்திருப்பதில் கவனம் செலுத்துகிறேன். அதன் பிறகு தான் மற்றது எல்லாம். உலக அளவில் கொரோனாவின் தாக்கமும், பயணக்கட்டுப்பாடுகளும் இன்னும் நீடிப்பதால் எதையும் திட்டமிட முடியாத நிலை உள்ளது. ஒவ்வொரு நாளாக விளையாடுவது மட்டுமே இப்போது நிஜம்.

இவ்வாறு பிராவோ கூறினார்.

Next Story