இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தான் ‘திரில்’ வெற்றி


இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தான் ‘திரில்’ வெற்றி
x
தினத்தந்தி 3 Sep 2020 12:52 AM GMT (Updated: 3 Sep 2020 12:52 AM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் ‘திரில்’ வெற்றி பெற்றது.

மான்செஸ்டர்,

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 4 விக்கெட்டுக்கு 190 ரன்கள் குவித்தது. ஹைதர் அலி 54 ரன்களும், முகமது ஹபீஸ் 86 ரன்களும் (52 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசினர். அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி டாம் பான்டன் (46 ரன்), மொயீன் அலி (61 ரன்), சாம் பில்லிங்ஸ் (26 ரன்) ஆகியோரின் அதிரடியால் இலக்கை நெருங்கியது. ஆனால் கேப்டன் மோர்கன் (10 ரன்னில் ரன்-அவுட்) ஏமாற்றத்திற்கு உள்ளானார்.

கடைசி 2 பந்தில் 12 ரன்கள் தேவைப்பட்ட போது, கடைசி ஓவரின் 5-வது பந்தை டாம் கர்ரன் சிக்சருக்கு அனுப்பி மிரட்டினார். இதனால் பரபரப்பு தொற்றியது. இறுதி பந்திலும் சிக்சர் தேவை என்ற நிலையில், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுப் ஆப்-சைடில் யார்க்கராக போட்டு மடக்கினார். இந்த பந்தை டாம் கர்ரனால் தொடகூட முடியவில்லை. இங்கிலாந்து அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 185 ரன்களே எடுக்க முடிந்தது.

இதன் மூலம் 5 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்த பாகிஸ்தான் அணி 3 போட்டி கொண்ட இந்த தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் ரத்தானது. 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருந்தது. பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

Next Story