அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நட்சத்திர வீரர் ஜோகோவிச் தகுதி நீக்கம் + "||" + US Open 2020: World No. 1 Novak Djokovic Disqualified From The Tournament After Hitting Official With The Ball In Round Of 16
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நட்சத்திர வீரர் ஜோகோவிச் தகுதி நீக்கம்
உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரரான நோவக் ஜோகாவிச் அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டித்தொடரில் இருந்து நம்பர் ஒன் வீரரும், 17 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஸ்பெயினின் பாப்லோ கரீனோ பஸ்டாவை எதிர்த்து விளையாடிய ஜோகோவிச், 5-6 என்ற கணக்கில் தனது முதல் செட்டை இழந்தார். இதனால், கடும் ஆத்திரம் அடைந்த ஜோகோவிச் பந்தை ஆவேசமாக டென்னிஸ் கோர்ட்டுக்கு வெளியே அடித்தார். அவர் அடித்த பந்து போட்டி நடத்தும் பெண் அதிகாரி ஒருவரின் கழுத்தில் பலமாக தாக்கியது. இதனால், வலியால் துடித்த பெண் அதிகாரி சில நிமிடங்களுக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பினார். இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த ஜோகோவிச் உடனடியாக அந்தப்பெண் அலுவலரிடம் சென்று தனது செயலுக்கு விளக்கமும் அளித்தார்.
எனினும், ஜோகோவிச் செயல் குறித்து ஆட்டத்தின் ரெஃப்ரியிடம் 10 நிமிடங்கள் பெண் அதிகாரி பேசினார். இதையடுத்து, அமெரிக்கா ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து ஜோகோவிச் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். கரீனோ பாஸ்டா வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.
நடப்பு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் உலகின் முன்னணி வீரர்களான ரோஜர் பெடரர், ரபேல் நடால் ஆகியோர் பங்கேற்காத காரணத்தால் ஜோகோவிச் எளிதில் பட்டம் வெல்ல வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்ட நிலையில், போட்டித்தொடரில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது ஜோகோவிச் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் செரீனா, ஆஸ்திரியாவின் டொமினிக் திம் ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர். இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடியும் அசத்தியது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வி கண்டு வெளியேறினார்.