கிரிக்கெட்

கடைசி 20 ஓவர் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றி + "||" + Australia win consolation victory over England in the last 20 overs

கடைசி 20 ஓவர் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றி

கடைசி 20 ஓவர் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றி
கடைசி 20 ஓவர் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றிபெற்றது.
சவுதம்டன், 

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இங்கிலாந்து அணியில் விரலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்படும் கேப்டன் மோர்கன் மற்றும் ஜோஸ் பட்லர், ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், கம்மின்ஸ், அலெக்ஸ் கேரி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. மோர்கன் இல்லாததால் மொயீன் அலி முதல்முறையாக இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்டார். இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்தது. ஜானி பேர்ஸ்டோ அரைசதம் (55 ரன்) அடித்தார். அடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலியா 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 146 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. ஸ்டீவன் சுமித் (3 ரன்), மேக்ஸ்வெல் (6 ரன்) மீண்டும் சொதப்பிய நிலையில் கேப்டன் ஆரோன் பிஞ்ச் (39 ரன்), ஸ்டோனிஸ் (26 ரன்), மிட்செல் மார்ஷ் (39 ரன், நாட்-அவுட்) ஆகியோர் கணிசமான பங்களிப்பை அளித்து வெற்றிக்கு வித்திட்டனர். ஆட்டநாயகன் விருதை பெற்ற மிட்செல் மார்ஷ் இரண்டு முறை கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பியது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் முதல் 2 ஆட்டங்களில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருந்ததால் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலியா 20 ஓவர் அணிகளின் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடம் வகித்தது. பிறகு முதல் இரு ஆட்டங்களில் தோற்றதால் இங்கிலாந்திடம் முதலிடத்தை பறிகொடுத்து மயிரிழையில் பின்தங்கியது. இந்த நிலையில் கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றதால் ஆஸ்திரேலியா மறுபடியும் ‘நம்பர் ஒன்’ அரியணையில் ஏறியது.

அடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது ஒரு நாள் போட்டி மான்செஸ்டரில் நாளை நடக்கிறது.