12 ஆண்டு கால ஏக்கம் தணிந்து ராஜஸ்தான் ராயல்சில் வசந்தம் வீசுமா?


12 ஆண்டு கால ஏக்கம் தணிந்து ராஜஸ்தான் ராயல்சில் வசந்தம் வீசுமா?
x
தினத்தந்தி 10 Sep 2020 12:13 AM GMT (Updated: 10 Sep 2020 12:13 AM GMT)

12 ஆண்டு கால ஏக்கம் தணிந்து ராஜஸ்தான் ராயல்சில் வசந்தம் வீசுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா வருகிற 19-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் நிலையில் அதில் பங்கேற்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பற்றிய ஒரு அலசல் வருமாறு:-

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2008-ம் ஆண்டு நடந்த முதலாவது ஐ.பி.எல்.-ல் சென்னை சூப்பர் கிங்சை கடைசி பந்தில் வீழ்த்தி மகுடம் சூடியது. அந்த ஐ.பி.எல்.-ல் மிகவும் பலவீனமான அணி என்று வர்ணிக்கப்பட்ட ராஜஸ்தான் அணி ஷேன் வார்னேவின் உத்வேகமான கேப்டன்ஷிப்பில் வீறுநடை போட்டு ஆச்சரியமூட்டியது. அதன் பிறகு இந்த நாள் வரைக்கும் அந்த அணி இறுதிப்போட்டிக்கு கூட முன்னேறவில்லை. சூதாட்ட புகாரில் சிக்கியதால் இரண்டு ஆண்டு தடை நடவடிக்கைக்கும் உள்ளானது.

இந்த சீசனில் ராஜஸ்தான் அணியில் ஸ்டீவன் சுமித் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஜோப்ரா ஆர்ச்சர், டேவிட் மில்லர், ஒஷானே தாமஸ், ஆண்ட்ரூ டை, டாம் கர்ரன் என்று வெளிநாட்டு நட்சத்திர வீரர்களின் பட்டாளம் அணிவகுத்து நிற்கிறது. ஆனால் ஆடும் லெவனில் 4 வெளிநாட்டவர் மட்டுமே இடம் பெற முடியும் என்பதால் பெரும்பாலான வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் தான்.

ரூ.12½ கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட உலகின் தலைச்சிறந்த ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தொடக்க கட்ட ஆட்டங்களில் விளையாட முடியாத நிலையில் தவிக்கிறார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையை அருகில் இருந்து கவனித்து வரும் பென் ஸ்டோக்ஸ் எப்போது ஐ.பி.எல். அணியுடன் இணைவார் என்பது உறுதியாக தெரியவில்லை. இதே போல் சர்வதேச போட்டிகளில் விளையாடி வரும் ஸ்டீவன் சுமித், பட்லர், ஆர்ச்சர் உள்ளிட்டோர் ஐ.பி.எல்.-ல் ஒரு சில ஆட்டங்களில் ஆட முடியாது.

இத்தகைய ஆரம்பகட்ட சவால்களை ராஜஸ்தான் சமாளித்து மீண்டு வருவதை பொறுத்து தான் அவர்களின் வெற்றிப்பயணம் அமையும். ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில் கலக்கிய பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால், பவுலர் கார்த்திக் தியாகி ஆகியோர் சீனியர் மட்டத்தில் தங்களை எப்படி நிலைநிறுத்தப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்திய வீரர்களில் சஞ்சு சாம்சன், உத்தப்பா, உனட்கட், ஸ்ரேயாஸ் கோபால் கவனிக்கத்தக்க வீரர்களாக உள்ளனர். சரியான அணிச்சேர்க்கையுடன் ஒருங்கிணைந்து விளையாடும் பட்சத்தில் ராஜஸ்தான் அணியில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மறுபடியும் வசந்தம் வீசலாம்.

அணி வீரர்கள்

ஸ்டீவன் சுமித் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன், ராபின் உத்தப்பா, ஆண்ட்ரூ டை, கார்த்திக் தியாகி, அங்கித் ராஜ்புத், ஸ்ரேயாஸ் கோபால், ராகுல் திவேதியா, ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்கண்டே, மஹிபால் லோம்ரோர், ஒஷானே தாமஸ், ரியான் பராக், ஜெய்ஸ்வால், அனுஜ் ரவாத், ஆகாஷ் சிங், ஜோப்ரா ஆர்ச்சர், டேவிட் மில்லர், ஜோஸ் பட்லர், மனன் வோரா, ஷசாங் சிங், வருண் ஆரோன்,டாம் கர்ரன், அனிருதா ஜோஷி. தலைமை பயிற்சியாளர்: ஆன்ட்ரூ மெக்டொனால்டு (ஆஸ்திரேலியா).

இதுவரை...

2008-சாம்பியன், 2009-லீக் சுற்று, 2010-லீக் சுற்று, 2011-லீக் சுற்று, 2012-லீக் சுற்று, 2013-பிளே-ஆப் சுற்று, 2014-லீக் சுற்று, 2015-பிளே-ஆப் சுற்று, 2018-பிளே-ஆப் சுற்று, 2019- லீக் சுற்று.

Next Story