மாற்றங்களால் ஏற்றம் பெறுமா பஞ்சாப்?


மாற்றங்களால் ஏற்றம் பெறுமா பஞ்சாப்?
x
தினத்தந்தி 10 Sep 2020 11:12 PM GMT (Updated: 10 Sep 2020 11:12 PM GMT)

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை பற்றிய ஒரு அலசல் வருமாறு:-

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இதுவரை பட்டம் வெல்லாத அணிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் ஒன்று. அதிகபட்சமாக 2014-ம் ஆண்டில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தது. இதன் இறுதி ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சிடம் தோற்றது. அதன் பிறகு நடந்த ஐ.பி.எல். போட்டிகளில் பஞ்சாப் அணி லீக் சுற்றை கூட தாண்டியதில்லை.

ஐ.பி.எல். கோப்பையை முதல்முறையாக ருசிக்கும் துடிப்புடன் உள்ள அந்த அணி நிர்வாகம், வழக்கம் போல் இந்த முறையும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்துள்ளது. தலைமை பயிற்சியாளராக இந்திய முன்னாள் கேப்டன் அனில் கும்பிளே பொறுப்பேற்றுள்ளார். இந்த சீசனில் இந்தியரை தலைமை பயிற்சியாளராக கொண்ட ஒரே அணி பஞ்சாப் தான்.

இதே போல் கடந்த இரு சீசன்களில் கேப்டனாக இருந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பரஸ்பர மாற்றம் அடிப்படையில் டெல்லி அணிக்கு ஒதுக்கப்பட்டார். இதையடுத்து பஞ்சாப் அணியின் புதிய அதாவது 12-வது கேப்டனாக லோகேஷ் ராகுல் செயல்பட உள்ளார். முன்பு பஞ்சாப்புக்காக விளையாடி பிறகு வேறு அணிக்கு தாவிய ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கிளைன் மேக்ஸ்வெல்லை ரூ.10¾ கோடிக்கு ஏலத்தில் எடுத்து மீண்டும் பஞ்சாப் அணியில் சேர்த்துள்ளனர்.

லோகேஷ் ராகுலும், ‘சிக்சர் மன்னன்’ கிறிஸ் கெய்லும் அதிரடியான தொடக்க ஆட்டக்காரர்கள். சிறிது நேரம் களத்தில் நின்றாலும் பொளந்து கட்டி விடுவார்கள். மேக்ஸ்வெல், நிகோலஸ் பூரனும் எதிரணியின் பந்து வீச்சை சிதறடிப்பதில் வல்லவர்கள்.

ஆனால் மிடில் வரிசை தான் சற்று பலவீனமாக தென்படுகிறது. கருண் நாயர், தீபக் ஹூடா, மயங்க் அகர்வால், சர்ப்ராஸ் கான் உள்ளிட்டோர் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும். பந்து வீச்சில் முகமது ஷமி, ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில் 17 விக்கெட் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் மற்றும் முஜீப் ரகுமான், முருகன் அஸ்வின், காட்ரெல், நீஷம், ஜோர்டான் என்று திறமையான வீரர்களுக்கு பஞ்சமில்லை. இப்போதைக்கு பார்ப்பதற்கு, அணி மிகவும் வலுவாகவே தெரிகிறது.

2014-ம் ஆண்டில் தொடக்ககட்ட ஆட்டங்கள் அமீரகத்தில் நடந்த போது முதல் 5 ஆட்டங்களில் பஞ்சாப் அணி கம்பீரமாக வெற்றி பெற்றது. மேக்ஸ்வெல் 95, 89, 95 ரன் வீதம் நொறுக்கினார். மறுபடியும் அதே மேக்ஸ்வெல்லுடன் அமீரகத்தில் களம் காணும் நிலையில் பஞ்சாப் அணிக்கு புது நம்பிக்கை பிறந்துள்ளது. தனது தொடக்க ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்சை 20-ந்தேதி எதிர்கொள்கிறது.

Next Story