கிரிக்கெட்

டெல்லிக்கு கிட்டுமா கிரீடம்? + "||" + Will Delhi get the crown?

டெல்லிக்கு கிட்டுமா கிரீடம்?

டெல்லிக்கு கிட்டுமா கிரீடம்?
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பற்றிய ஒரு சுவாரஸ்யமான அலசல் வெளியிடப்பட்டு உள்ளது.
13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பற்றிய ஒரு சுவாரஸ்யமான அலசல்:-

தற்போது விளையாடும் 8 அணிகளில் ஒரு முறை கூட இறுதி சுற்றை எட்டிப்பார்க்காத ஒரே அணி, அதிகமான தோல்விகளை தழுவிய அணி (97 தோல்வி) என்று ஐ.பி.எல். சாதனை புத்தகத்தில் மோசமான வரலாற்றை பெற்றிருக்கும் ஒரு அணி எதுவென்றால் அது டெல்லி கேப்பிட்டல்ஸ் தான்.

ரிக்கிபாண்டிங் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு அந்த அணியில் நிறைய முன்னேற்றத்தை பார்க்க முடிந்தது. கடந்த சீசனில் டெல்லி அணி 7 ஆண்டுக்கு பிறகு பிளே-ஆப் சுற்றை எட்டியது. இந்த முறை இன்னும் பட்டைதீட்டப்பட்டு சரியான கலவையுடன் களம் இறங்குவதால், நீண்ட கால சோகத்துக்கு முடிவு கட்ட முடியும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறது.

டெல்லி அணியில், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், ஷிகர் தவான், பிரித்வி ஷா, ரிஷாப் பண்ட், ராஜஸ்தான் அணியில் இருந்து பரஸ்பர பேச்சுவார்த்தை அடிப்படையில் இழுக்கப்பட்ட ரஹானே என்று தரமான இந்திய பேட்ஸ்மேன்கள் அங்கம் வகிப்பது மிகப்பெரிய பலமாகும். இவர்களோடு ஏலத்தில் புதிதாக வாங்கப்பட்ட ஹெட்மயர், அலெக்ஸ் கேரி, ஸ்டோனிஸ் ஆகிய வெளிநாட்டு பேட்ஸ்மேன்களும் வலு சேர்க்கிறார்கள். மெதுவான தன்மை கொண்ட அமீரக ஆடுகளங்களில் அனுபவம் வாய்ந்த சுழல் சூறாவளிகள் அஸ்வின், அமித் மிஸ்ரா, அக்‌ஷர் பட்டேல் ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

ஆனால் வேகப்பந்துவீச்சு தாக்குதலை பொறுத்தமட்டில், காஜிசோ ரபடாவைத் தான் அதிகமாக சார்ந்து இருக்க வேண்டி உள்ளது. அவர் ஏதாவது காயத்தில் சிக்கினால் இந்த பகுதி பலவீனமடைந்து விடும். இதே போல் பிரித்வி ஷா, ஷிகர் தவான், ரஹானே ஆகிய மூன்று தொடக்க வீரர்களில் எந்த இருவரை தேர்வு செய்வது என்ற தலைவலியும் உள்ளது. இது போன்ற சிறு குறைபாடுகளை எல்லாம் களைந்து, இந்த தடவை ஐ.பி.எல்.-ல் தங்கள் தலையெழுத்தை மாற்ற வரிந்துகட்டி நிற்கும் டெல்லி அணி தனது தொடக்க ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை 20-ந்தேதி எதிர்கொள்கிறது.