கிரிக்கெட்

மும்பை அணியின் ஆதிக்கம் தொடருமா? + "||" + Will Mumbai continue to dominate?

மும்பை அணியின் ஆதிக்கம் தொடருமா?

மும்பை அணியின் ஆதிக்கம் தொடருமா?
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பலம், பலவீனம் பற்றிய ஓர் அலசல் தொகுப்பினை காணலாம்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 19-ந் தேதி தொடங்கும் 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணியின் பலம், பலவீனம் பற்றிய ஒரு அலசல் வருமாறு:-

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிக முறை (4 தடவை) மகுடம் சூடியது, அதிக வெற்றிகளை (107 ஆட்டங்களில்) குவித்தது ஆகிய பெருமைகளை தன்வசப்படுத்தி வைத்து இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களம் காணுகிறது.

மும்பை அணியின் பேட்டிங் வரிசை அசுர பலம் கொண்டு விளங்குகிறது என்றால் மிகையாகாது. தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோகித் சர்மா, குயின்டான் டி காக் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இருவரும் தாக்குப்பிடித்து விட்டால் ரன் வேட்டையில் வெளுத்து வாங்கி விடுவார்கள். அதிலும் முதலில் சற்று நிதானமாக ஆடி பின்னர் வேகத்தை ‘டாப் கியரில்’ அதிகரிக்கக்கூடிய ‘ஹிட்மேன்’ ரோகித் சர்மா நிலைத்து விட்டால் எதிரணி பவுலர்களின் பாடு திண்டாட்டம் தான்.

மிடில் வரிசை பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட் ஆகியோரும் அணிக்கு வலுசேர்க்கக்கூடிய வல்லமை படைத்தவர்கள். பொல்லார்ட் கரிபியன் பிரிமீயர் லீக் போட்டியில் தனது அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த கையோடு மும்பை படையுடன் இணைந்து இருக்கிறார். பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தரமான ஆல்-ரவுண்டர்கள் என்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும். அதிரடியாக ஆடக்கூடிய தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் லின் எந்த வரிசையில் களம் இறக்கப்படுவார் என்பது உறுதியாக தெரியவில்லை.

உலகின் சிறந்த பவுலர்களாக திகழும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, டிரென்ட் பவுல்ட் எந்த பேட்ஸ்மேனையும் திக்குமுக்காட வைத்துவிடும் திறமைசாலிகள். வெளிநாட்டை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் பேட்டின்சன், ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட நாதன் கவுல்டர் நிலே, மெக்லெனஹான், ரூதர்போர்ட் ஆகியோர் அணியில் இடம் பெற்று இருந்தாலும் இவர்களில் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகம் வரை பந்து வீசக்கூடிய ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் பேட்டிசனுக்கு தான் ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

சுழற்பந்து வீச்சில் குருணல் பாண்ட்யா, ராகுல் சாஹர் ஆகியோரை தான் அந்த அணி அதிகம் நம்பி இருக்கிறது. இருவரும் கட்டுக்கோப்பாக பந்து வீசக்கூடியவர்கள் என்றாலும் விக்கெட்டுகளை வேகமாக வீழ்த்தும் சக்தி படைத்தவர்கள் என்று சொல்ல முடியாது. அத்துடன் நெருக்கடியை சமாளிக்கக்கூடிய அனுபவம் அவர்களுக்கு பெரிய அளவில் கிடையாது. எனவே சுழற்பந்து வீச்சு தான் மும்பை அணியின் பலவீனமாக தென்படுகிறது.

இதே போல் ஐ.பி.எல். தொடரில் அதிக விக்கெட்டுகள் (170 விக்கெட்) வீழ்த்தியவரும், கடந்த ஆண்டு இறுதி சுற்றில் கடைசி ஓவரில் மும்பைக்கு வெற்றியை தேடித்தந்தவருமான ‘யார்க்கர் மன்னன்’ இலங்கையைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா தனது தந்தைக்கு உடல்நலக்குறைவால் விலகி இருப்பது மும்பை அணிக்கு பெருத்த பின்னடைவாக கருதப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரக ஆடுகளங்கள் மெதுவான தன்மை கொண்டவை. சுழற்பந்து வீச்சுக்கு அனுகூலமான இந்த ஆடுகளங்களில் மும்பை அணியின் முந்தைய செயல்பாடு மெச்சும்படியாக இருந்ததில்லை. 2014-ம் ஆண்டில் அமீரகத்தில் நடந்த தொடக்க லீக் ஆட்டங்களில் 5-ல் விளையாடிய மும்பை அணி தொடர்ச்சியாக ஐந்திலும் தோல்வியை சந்தித்தது. அந்த கசப்பான அனுபவத்தை மறந்து சிக்கலான தருணங்களில் அணியை அமைதியாகவும், நேர்த்தியாகவும் வழிநடத்தக்கூடிய ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் தனது ஆதிக்கத்தை தொடருமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். மும்பை அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் வருகிற 19-ந் தேதி முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சை அபுதாபியில் சந்திக்கிறது.