ஐக்கிய அரபு அமீரக வெப்பநிலையை சமாளிப்பது சவாலாக இருக்கும்-டிவில்லியர்ஸ் சொல்கிறார்


ஐக்கிய அரபு அமீரக வெப்பநிலையை சமாளிப்பது சவாலாக இருக்கும்-டிவில்லியர்ஸ் சொல்கிறார்
x
தினத்தந்தி 17 Sep 2020 12:30 AM GMT (Updated: 16 Sep 2020 7:42 PM GMT)

ஐக்கிய அரபு அமீரக வெப்பநிலையை சமாளிப்பது சவாலாக இருக்கும் என டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

துபாய், 

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் வருகிற 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை நடக்கிறது. இதில் விராட்கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 21-ந் தேதி ஐதராபாத் சன் ரைசர்சை சந்திக்கிறது. 

இதையொட்டி பெங்களூரு அணியின் அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ் அளித்த ஒரு பேட்டியில், ‘ஐக்கிய அரபு அமீரகத்தில் நிலவும் சீதோஷ்ண நிலையில் விளையாடிய அனுபவம் எனக்கு கிடையாது. இங்கு மிகவும் வெப்பமாக இருக்கிறது. இந்த சூழ்நிலை சென்னையில் ஜூலை மாதத்தில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியதை ஞாபகப்படுத்துகிறது. அது தான் எனது வாழ்க்கையில் அதிக வெப்ப நிலையில் ஆடிய போட்டியாகும். இரவு 10 மணிக்கும் இங்கு வெப்பத்தின் தாக்கத்தை உணர முடியும். இங்கு நிலவும் தட்பவெப்பநிலை ஆட்டத்தில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் இன்னிங்சின் இறுதிவரை முழுமையான சக்தியுடன் இருப்பது என்பது கடினமானதாகும். இங்கு நிலவும் வெப்ப நிலையை சமாளிப்பது எல்லா அணிகளுக்கும் பெரிய சவாலாக இருக்கும்.

பெரிய போட்டிகளில் எல்லோரும் அதிக ரசிகர்கள் முன்னிலையில் ஆடிய அனுபவம் கொண்டவர்கள். ரசிகர்களின் ஆரவாரம் வீரர்களின் உத்வேகத்தை அதிகரிக்கச் செய்யும். இந்த முறை நாங்கள் ரசிகர்களின் ஊக்கத்தை தவற விடுகிறோம். அதற்காக ரசிகர்கள் இல்லாமல் ஆடிய அனுபவம் கிடையாது என்று சொல்லவில்லை. ஆரம்ப கால கட்டங்களில் ரசிகர்கள் இல்லாத ஸ்டேடியங்களில் பலமுறை விளையாடி இருக்கிறேன். சர்வதேச போட்டிகளில் எப்பொழுதும் ரசிகர்கள் கூட்டத்திற்கு முன்னிலையில் தான் விளையாடி இருக்கிறோம். நீண்ட நாட்களுக்கு பிறகு கிரிக்கெட் போட்டியில் விளையாட இருப்பதால் எல்லா வீரர்களும் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள். இந்த போட்டி தொடரில் ஆட்ட தரத்திலும், விறுவிறுப்பிலும் எந்தவித குறைவும் இருக்காது’ என்றார்.


Next Story