இந்தியா-இங்கிலாந்து தொடர் அமீரகத்தில் நடைபெறுமா?


இந்தியா-இங்கிலாந்து தொடர் அமீரகத்தில் நடைபெறுமா?
x
தினத்தந்தி 19 Sep 2020 10:45 PM GMT (Updated: 19 Sep 2020 9:01 PM GMT)

இந்திய கிரிக்கெட் அணி டிசம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டி தொடரில் விளையாடுகிறது.

துபாய்,

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி முடிந்ததும், இந்திய கிரிக்கெட் அணி டிசம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டி தொடரில் விளையாடுகிறது. அடுத்து இங்கிலாந்து அணி அடுத்த ஆண்டு ஜனவரியில் இந்தியா வருகிறது. அந்த அணி இந்தியாவுடன் 5 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட உள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று தெரிகிறது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம், ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியம் இடையே வருங்காலத்தில் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது தொடர்பாக நேற்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த தகவலை இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் அந்த ஒப்பந்தத்தில் என்ன விவரங்கள் இடம் பெற்று இருக்கிறது என்பது குறித்து வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் இந்தியாவில் கொரோனா பிரச்சினை தொடர்ந்து நீடித்தால் அடுத்த ஆண்டு நடைபெற வேண்டிய இந்தியா-இங்கிலாந்து தொடர் மற்றும் அடுத்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகளை 2-வது வாய்ப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தலாம் என்பதன் அடிப்படையிலேயே இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story