பஞ்சாப் அணியை டெல்லி வீழ்த்தியது: அஸ்வின் பந்து வீச்சு திருப்பு முனையாக அமைந்தது கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கருத்து


பஞ்சாப் அணியை டெல்லி வீழ்த்தியது: அஸ்வின் பந்து வீச்சு திருப்பு முனையாக அமைந்தது கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கருத்து
x
தினத்தந்தி 21 Sep 2020 11:00 PM GMT (Updated: 21 Sep 2020 8:06 PM GMT)

‘பஞ்பாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரே ஓவரில் 2 விக்கெட் வீழ்த்திய அஸ்வினின் பந்து வீச்சு எங்களுக்கு திருப்பு முனையாக அமைந்தது’ என்று டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தெரிவித்தார்.

துபாய்,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் துபாயில் நேற்று முன்தினம் இரவு நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சூப்பர் ஒவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றியை ருசித்தது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்ணயித்த 158 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி ஒரு கட்டத்தில் 55 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றியின் விளிம்பிற்கு அழைத்து சென்றார்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவை என்ற நிலையில் அந்த ஓவரில் மார்கஸ் ஸ்டோனிஸ் பந்து வீசினார். முதல் 3 பந்துகளில் சிக்சர், பவுண்டரி உள்பட 12 ரன்கள் சேர்த்த மயங்க் அகர்வால் (89 ரன்கள், 60 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்) 5-வது பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். கடைசி பந்தில் ஒரு ரன் தேவையாக இருந்த போது கிறிஸ் ஜோர்டான் (5 ரன்) கேட்ச் ஆனார். எனவே பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டம் டை (சமன்) ஆனது. ஐ.பி.எல். வரலாற்றில் ‘டை’ ஆன 10-வது போட்டி இதுவாகும்.

வெற்றி தோல்வியை நிர்ணயிக்க கடைப்பிடிக்கப்பட்ட சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் லோகேஷ் ராகுல், நிகோலஸ் பூரன் ஆகியோர் இறங்கினார்கள். அந்த ஓவரை காஜிசோ ரபடா வீசினார். முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்த லோகேஷ் ராகுல் அடுத்த பந்தில் அக்‌ஷர் பட்டேலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து மேக்ஸ்வெல் களம் இறங்கினார். 3-வது பந்தில் நிகோலஸ் பூரன் போல்டு ஆனார். இதனால் பஞ்சாப் அணி 2 விக்கெட்டையும் இழந்து 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. சூப்பர் ஓவரில் ஒரு அணி எடுத்த குறைந்தபட்ச ரன் இதுவாகும்.

பின்னர் 3 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ரிஷாப் பண்ட், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் களம் கண்டனர். அந்த ஓவரை முகமது ஷமி வீசினார். முதல் பந்தில் ரன் விட்டுக் கொடுக்காத முகமது ஷமி அடுத்த பந்தை வைடாக வீசியதால் ஒரு ரன் உதிரியாக சென்றது. அடுத்த பந்தில் ரிஷாப் பண்ட் 2 ரன் எடுத்தார். இதனால் டெல்லி அணி சிரமமின்றி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. 53 ரன்கள் சேர்த்ததுடன் 2 விக்கெட்டும் கைப்பற்றி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த டெல்லி வீரர் மார்கஸ் ஸ்டோனிஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்கு பிறகு டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் அளித்த பேட்டியில், ‘ஆட்டம் வெவ்வேறு திசைகளில் திரும்பியது கடினமாக இருந்தது. கடந்த சீசனிலும் இதுபோன்ற நிலையை சந்தித்த அனுபவம் இருந்ததால் பிரச்சினையில்லை. ரபடா வெற்றிக்குரிய திறமையை வெளிப்படுத்தினார். ஸ்டோனிஸ்சின் பேட்டிங் ஆட்டத்தின் போக்கை மாற்றுவதாக இருந்தது. தொடக்கத்தில் அடித்து ஆடுவது கடினமானதாகும். நானும், ரிஷாப் பண்டும் மிடில் ஆர்டரில் வலுசேர்த்தோம். மின்னொளியில் கேட்ச் செய்வது கடினமானது தான். அதற்காக அதனை ஒரு காரணமாக சொல்ல முடியாது. அந்த விஷயத்தில் நாங்கள் இன்னும் பலமடைய வேண்டும். ரன் இலக்கு குறைவாக இருந்ததால் விக்கெட்டுகள் வீழ்த்துவது எங்களுக்கு முக்கியமானதாக இருந்தது. அஸ்வின் வீசிய ஒரு ஓவர் மிகவும் முக்கியமானதாகும். அதில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியதால் ஆட்டம் எங்களுக்கு சாதகமாக திரும்பியது. அது தான் 20 ஓவர் போட்டியின் தன்மையாகும். தோள்பட்டையில் காயம் அடைந்த அஸ்வின் அடுத்த ஆட்டத்துக்குள் தயாராகி விடுவேன் என்று கூறினார். அவரது காயம் குறித்து பிசியோதெரபிஸ்ட் இறுதி முடிவு எடுப்பார்’ என்று தெரிவித்தார்.

Next Story