‘சாஹலால் வெற்றி சாத்தியமானது’ பெங்களூரு கேப்டன் கோலி பாராட்டு


‘சாஹலால் வெற்றி சாத்தியமானது’ பெங்களூரு கேப்டன் கோலி பாராட்டு
x
தினத்தந்தி 22 Sep 2020 11:15 PM GMT (Updated: 22 Sep 2020 8:41 PM GMT)

‘ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் யுஸ்வேந்திர சாஹலின் சிறப்பான பந்து வீச்சால் எங்கள் வெற்றி சாத்தியமானது’ என்று பெங்களூரு அணியின் கேப்டன் கோலி பாராட்டினார்.

துபாய்,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் துபாயில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 10 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் சன்ரைசர்சை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது. 2016-ம் ஆண்டுக்கு பிறகு தொடக்க லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்று இருப்பது இதுவே முதல்முறையாகும்.

இதில் பெங்களூரு அணி நிர்ணயித்த 164 ரன் இலக்கை நோக்கி ஆடிய ஐதராபாத் அணி 15 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. அதன் பிறகு அந்த அணியின் விக்கெட்டுகள் சீட்டுக் கட்டு போல் மளமளவென சரிந்தன. 19.4 ஓவர்களில் ஐதராபாத் அணி 153 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆகி அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. அந்த அணியின் கடைசி 8 விக்கெட்டுகள் 32 ரன்களுக்குள் பறிபோனது. 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்திய பெங்களூரு சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்கு பிறகு பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில், ‘உண்மையை சொல்லப்போனால் இந்த வெற்றி பிரமாதமானதாகும். கடந்த ஆண்டில் நாங்கள் தொடக்கத்தில் 0-6 என்ற கணக்கில் (முதல் 6 ஆட்டத்தில் தோல்வி) பின்தங்கி இருந்தோம். இந்த முறை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருப்பது அருமையானது. யுஸ்வேந்திர சாஹல் முற்றிலுமாக ஆட்டத்தை எங்கள் பக்கம் திருப்பினார். பல சுழற்பந்து வீச்சாளர்கள் அதிகம் சோபிக்க முடியாத இந்த ஆடுகளத்தில் மணிக்கட்டை பயன்படுத்தி வீசும் தன்னால் பந்தை சுழல வைத்து சாதிக்க முடியும் என்பதை நிரூபித்தார். எந்தவொரு பிட்ச்சிலும் தன்னால் விக்கெட் வீழ்த்த முடியும் என்பதை அவர் செய்து காட்டினார். தாக்குதல் பாணியில் பந்து வீசி அவர் ஆட்டத்தின் போக்கை மாற்றினார். டிவில்லியர்சின் அதிரடி பேட்டிங் (30 பந்தில் 51 ரன்) அணி 160 ரன்களை கடக்க உதவியது. நாங்கள் இன்னும் 10-20 ரன்கள் கூடுதலாக எடுத்து இருக்க வேண்டும். பகுதி நேர பவுலர்கள் சிறப்பாக பந்து வீசுவது நல்ல அறிகுறியாகும்’ என்றார்.

Next Story