கிரிக்கெட்

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 7-வது வீரராக களம் இறங்கியது ஏன்? டோனி விளக்கம் + "||" + Why landed on the field as the 7th player? Tony Description

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 7-வது வீரராக களம் இறங்கியது ஏன்? டோனி விளக்கம்

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 7-வது வீரராக களம் இறங்கியது ஏன்? டோனி விளக்கம்
ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 7-வது வீரராக களம் இறங்கியது ஏன்? என்பதற்கு சென்னை அணியின் கேப்டன் டோனி விளக்கம் அளித்தார்.
சார்ஜா,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சார்ஜாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த 4-வது லீக் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி வெற்றியுடன் போட்டியை தொடங்கியது. சஞ்சு சாம்சன் (32 பந்தில் 9 சிக்சருடன் 74 ரன்), ஸ்டீவன் சுமித் (69 ரன்) ஆகியோரது அரைசதங்களின் உதவியுடன் ராஜஸ்தான் அணி நிர்ணயித்த இமாலய இலக்கான 217 ரன்னை நோக்கி ஆடிய சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து அடங்கிப் போனது. பாப் டுபிளிஸ்சின் (72 ரன்கள், 37 பந்து, ஒரு பவுண்டரி, 7 சிக்சர்) போராட்டம் சரியான உறுதுணை இல்லாததால் பலனற்று போனது. டோனி 29 ரன்களுடன் (17 பந்து, 3 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார்.


இந்த ஆட்டத்தில் இரு அணியினரும் இணைந்து மொத்தம் 33 சிக்சர்கள் விளாசினர். இதன் மூலம் 2018-ம் ஆண்டில் சென்னை-பெங்களூரு அணிகள் இடையிலான ஆட்டத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்சர் சாதனையை சமன் செய்தனர்.

மலைக்க வைக்கும் பெரிய ஸ்கோரை நோக்கி விளையாடுகையில் மிடில் ஆர்டரில் டோனி இறங்கி அணியை முன்நின்று வழிநடத்தாமல் முந்தைய ஆட்டத்தை போல் 7-வது வீரராக பேட்டிங் செய்தது அவர் வெற்றியை கருத்தில் கொள்ளாமல் நிகர ரன் ரேட்டை நினைத்து விளையாடியதாக விமர்சிக்கப்பட்டது. இது குறித்து டோனி கருத்து தெரிவிக்கையில், ‘நீண்ட நாட்களாக நான் பேட்டிங் செய்யவில்லை. 14 நாட்கள் தனிமைப்படுத்துதலும் பின்னடைவாக அமைந்தது. அத்துடன் நாங்கள் சில வித்தியாசமான முயற்சிகளை செய்து பார்க்க விரும்புகிறோம். அதனால் தான் சாம் கர்ரனை முன்கூட்டியே களம் இறக்கினோம். இந்த முயற்சி பலன் அளிக்காவிட்டால் மீண்டும் எங்களது பலத்துக்கு ஏற்ப பழைய உத்திகளை கடைப்பிடிப்போம். இதுபோன்ற பெரிய இலக்கை எதிர்கொள்ளும் போது, மிகச்சிறப்பான தொடக்கம் அவசியம். அத்தகைய தொடக்கம் எங்களுக்கு கிடைக்கவில்லை.

ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்களை பாராட்டியாக வேண்டும். முதல் இன்னிங்ஸ் பந்து வீச்சை பார்த்து அதற்கு தகுந்த மாதிரியான அளவில் பந்து வீசினார்கள். அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் பேட்ஸ்மேனுக்கு வெளிப்புறத்தில் பந்து வீசினார்கள். ஆனால் எங்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் அது மாதிரி பந்து வீசாமல் தவறு இழைத்தனர். அப்படி செய்து இருந்தால் நாங்கள் அவர்களை 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி, நல்ல ஆட்டமாக அமைந்திருக்கும்’ என்றார்.