ஐ.பி.எல். கிரிக்கெட்: 2-வது வெற்றி யாருக்கு?


ஐ.பி.எல். கிரிக்கெட்: 2-வது வெற்றி யாருக்கு?
x
தினத்தந்தி 24 Sep 2020 11:30 PM GMT (Updated: 24 Sep 2020 7:57 PM GMT)

மும்பை இந்தியன்சை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2-வது ஆட்டத்தில் 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சிடம் தோல்வியை தழுவியது.

தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2-வது ஆட்டத்தில் 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சிடம் தோல்வியை தழுவியது. லேசான தசைப்பிடிப்பால் அவதிப்படும் சென்னை வீரர் அம்பத்தி ராயுடு இன்றைய ஆட்டத்திலும் இடம்பெறமாட்டார் என்று தெரிகிறது. தொடக்க வீரர் முரளிவிஜய் இரு ஆட்டத்திலும் சொதப்பி விட்டார். வேகப்பந்து வீச்சாளர் நிகிடி ராஜஸ்தானுக்கு எதிராக கடைசி ஓவரில் 4 சிக்சர்களை வாரி வழங்கினார். இதனால் சென்னை அணியில் சில மாற்றங்கள் செய்யப்படலாம். மூத்த சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. 217 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய கடந்த ஆட்டத்தில் பேட்டிங்கில் 7-வது வரிசையில் ஆடியதால் கடும் விமர்சனத்திற்குள்ளான கேப்டன் டோனி முன்கூட்டியே இறங்கி பழைய அதிரடியை காட்டுவாரா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். நம்பிக்கை அளிக்கும் வகையில் பாப் டு பிளிஸ்சிஸ் மட்டும் நிலையான ஆட்டத்தை (58, 72 ரன்) வெளிப்படுத்தி இருக்கிறார். ஜடேஜா, பியுஷ் சாவ்லா ஆகியோர் சுழலில் முத்திரை பதிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளனர்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை சூப்பர் ஓவர் வரை போராடி வீழ்த்தியது. வேகப்பந்து வீச்சாளர் ரபடா, சூப்பர் ஓவரில் 2 ரன்னுக்குள் எதிரணியை மடக்கி அசத்தினார். மார்கஸ் ஸ்டோனிஸ் அரைசதத்துடன், 2 விக்கெட் வீழ்த்தி ஆல்-ரவுண்டராக மின்னினார். தோள்பட்டை காயத்தால் பாதியில் வெளியேறிய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தற்போது வலி ஏதும் இல்லை என்று கூறியிருக்கிறார். இருப்பினும் அவர் ஆடும் லெவனில் இடம் பெறுவது சந்தேகம் தான். அவருக்கு பதிலாக அமித் மிஸ்ரா இடம் பிடிக்கலாம்.

மொத்தத்தில் இரு அணிகளுமே பலம் வாய்ந்தவை என்பதால் 2-வது வெற்றியை வசப்படுத்த கடுமையாக போராட வேண்டி இருக்கும்.

(நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்)

Next Story