கிரிக்கெட்

‘தோல்விக்கு நானே பொறுப்பு’- கோலி + "||" + ‘I am responsible for failure’ - Goalie

‘தோல்விக்கு நானே பொறுப்பு’- கோலி

‘தோல்விக்கு நானே பொறுப்பு’- கோலி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் துபாயில் நேற்று முன்தினம் இரவு லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 97 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை பந்தாடியது.
துபாய்,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் துபாயில் நேற்று முன்தினம் இரவு லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 97 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை பந்தாடியது. இதில் பஞ்சாப் அணி நிர்ணயித்த 207 ரன் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணி 17 ஓவர்களில் 109 ரன்னில் சுருண்டது. 69 பந்துகளில் 14 பவுண்டரி, 7 சிக்சருடன் 132 ரன்கள் விளாசிய பஞ்சாப் கேப்டன் லோகேஷ் ராகுல் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த போட்டியில் லோகேஷ் ராகுலின் கேட்ச்களை (83 மற்றும் 89 ரன்களில்) தவறவிட்டதால் விமர்சனத்துக்கு உள்ளான பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி மேலும் ஒரு சிக்கலில் சிக்கினார். அந்த அணியினர் பந்து வீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதால் கேப்டன் என்ற வகையில் விராட்கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.


தோல்வி குறித்து பெங்களூரு கேப்டன் கோலி கூறுகையில், ‘பவுலிங்கில் மிடில் ஓவர்களில் நன்றாகத் தான் செயல்பட்டோம். கேட்ச் வாய்ப்பை நான் தவற விட்டதால் ஏற்பட்ட பாதிப்பை நான் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். லோகேஷ் ராகுலின் கேட்ச் வாய்ப்பை கோட்டை விடாமல் இருந்து இருந்தால் அவர்கள் 200 ரன்களை கடந்து இருக்க முடியாது. 180 ரன்களுக்குள் அவர்களை கட்டுப்படுத்தி இருந்தால் சேசிங்கின் போது முதல் பந்தில் இருந்தே அடித்து ஆட வேண்டிய நெருக்கடி எங்களுக்கு ஏற்பட்டு இருக்காது.

கிரிக்கெட்டில் இதுபோல் நடப்பது சகஜம். அதனை ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும். தோல்வியை மறந்து அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து செல்ல வேண்டும். அத்துடன் நாம் செய்த தவறில் இருந்து பாடம் கற்றுகொள்ள வேண்டும்’ என்றார்.