அபாரமான பீல்டிங்: பஞ்சாப் அணி வீரர் நிகோலஸ் பூரனுக்கு பாராட்டு குவிகிறது


அபாரமான பீல்டிங்: பஞ்சாப் அணி வீரர் நிகோலஸ் பூரனுக்கு பாராட்டு குவிகிறது
x
தினத்தந்தி 28 Sep 2020 10:45 PM GMT (Updated: 28 Sep 2020 8:47 PM GMT)

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் சஞ்சு சாம்சன் 8-வது ஓவரில் முருகன் அஸ்வின் பந்து வீச்சை சிக்சருக்கு தூக்கினார்

சார்ஜா,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சார்ஜாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் இலக்கை நோக்கி பேட்டிங் செய்கையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் சஞ்சு சாம்சன் 8-வது ஓவரில் முருகன் அஸ்வின் பந்து வீச்சை சிக்சருக்கு தூக்கினார். சிக்சரை நோக்கி பறந்த பந்தை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர் நிகோலஸ் பூரன் (வெஸ்ட்இண்டீஸ்) பவுண்டரி எல்லையின் விளிம்பில் இருந்து சுமார் 2 மீட்டர் உயரத்துக்கு துள்ளிக்குதித்து அந்தரத்தில் அபாரமாக தடுத்ததுடன், தரையை நெருங்கும் சமயத்தில் பந்தை மைதானத்துக்குள் வீசி விட்டு அவர் பவுண்டரிக்கு வெளியில் லாவகமாக விழுந்தார். அவர் பந்தை மெய்சிலிர்க்கும் வகையில் தடுத்ததால் 6 ரன்னாக வேண்டிய அந்த பந்தில் 2 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. 4 ரன்கள் கட்டுப்படுத்தப்பட்டது. நிகோலஸ் பூரனின் வியக்கதக்க பீல்டிங்கை டெலிவிஷன் வர்ணனையாளர்கள் வெகுவாக பாராட்டினார்கள். ஐ.பி.எல். நிர்வாகமும் அவரது பீல்டிங்கை பாராட்டியுள்ளது. அப்போது வீரர்களுடன் அமர்ந்து இருந்த பஞ்சாப் அணியின் பீல்டிங் பயிற்சியாளரும், உலகின் முன்னணி பீல்டராக விளங்கியவருமான ஜான்டி ரோட்ஸ் (தென்ஆப்பிரிக்கா) எழுந்து நின்று கைதட்டினார்.

பூரனின் பீல்டிங் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர், ஷேவாக், ஆகாஷ் சோப்ரா, கெவின் பீட்டர்சன், ஜேம்ஸ் டெய்லர் (இருவரும் இங்கிலாந்து) உள்பட முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். தெண்டுல்கர் தனது டுவிட்டர் பதிவில், ‘எனது வாழ்க்கையில் நான் பார்த்த மிகவும் சிறப்பான பீல்டிங் இதுவாகும். நம்ப முடியாத வகையில் இருந்தது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story