‘ஒரே ஓவரில் 5 சிக்சர் அடித்தது வியப்பளித்தது’ ராஜஸ்தான் அணி வீரர் திவேதியா சொல்கிறார்


‘ஒரே ஓவரில் 5 சிக்சர் அடித்தது வியப்பளித்தது’ ராஜஸ்தான் அணி வீரர் திவேதியா சொல்கிறார்
x
தினத்தந்தி 28 Sep 2020 11:00 PM GMT (Updated: 28 Sep 2020 8:56 PM GMT)

வெற்றிக்கு பிறகு ராஜஸ்தான் அணி வீரர்கள் ராகுல் திவேதியா, சஞ்சு சாம்சன் ஆகியோர் போஸ் கொடுத்தனர்.

சார்ஜா,

‘பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரே ஓவரில் 5 சிக்சர் அடித்தது வியப்பளித்தது’ என்று ராஜஸ்தான் அணியின் வீரர் ராகுல் திவேதியா தெரிவித்தார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சார்ஜாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை வீழ்த்தி ‘திரில்’ வெற்றியை ருசித்ததுடன், ஐ.பி.எல். வரலாற்றில் அதிகபட்ச ரன் இலக்கை (224 ரன்கள்) விரட்டிப்பிடித்த அணி என்ற சாதனையை படைத்தது.

இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி மயங்க் அகர்வால் சதம் (106 ரன்கள்), மற்றும் கேப்டன் லோகேஷ் ராகுல் அரைசதத்தின் (69 ரன்கள்) உதவியுடன் 2 விக்கெட்டுக்கு 223 ரன்கள் குவித்தது. பின்னர் இமாலய இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்து பிரமிக்க வைத்தது. கடைசி 5 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 86 ரன்கள் திரட்டியது. வெற்றிகரமாக ரன் இலக்கை விரட்டிப்பிடித்த ஐ.பி.எல். ஆட்டத்தில் கடைசி 5 ஓவரில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன் இதுவாகும். ராஜஸ்தான் அணியில் அதிரடி காட்டிய கேப்டன் ஸ்டீவன் சுமித் 50 ரன்னும் (27 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), சஞ்சு சாம்சன் 85 ரன்னும் (42 பந்து, 4 பவுண்டரி, 7 சிக்சர்), ராகுல் திவேதியா 53 ரன்னும் (31 பந்து 7 சிக்சர்), ஜோப்ரா ஆர்ச்சர் ஆட்டம் இழக்காமல் 13 ரன்னும் (3 பந்து 2 சிக்சர்) எடுத்தனர்.

காட்ரெல் வீசிய ஒரு ஓவரில் (18-வது ஓவர்) ராஜஸ்தான் அணி வீரர் ராகுல் திவேதியா 5 சிக்சர்கள் பறக்கவிட்டு ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அத்துடன் ஐ.பி.எல். போட்டியில் கிறிஸ் கெய்லுக்கு (2012-ம் ஆண்டில் புனே அணிக்கு எதிராக) பிறகு ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் விளாசிய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்சன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

ஒரே ஓவரில் 5 சிக்சர் விளாசியது குறித்து ராகுல் திவேதியா கூறுகையில், ‘தொடக்கத்தில் (முதல் 19 பந்துகளில் 8 ரன்) நான் மோசமாகவே ஆடினேன். இதற்கு முன்பு இதுபோல் மந்தமாக நான் ஆடியது கிடையாது. இருப்பினும் நான் நம்பிக்கையை இழக்கவில்லை. ஏனெனில் வலைப்பயிற்சியின் போது நன்றாக அடித்து ஆடினேன். நான் நீண்ட தூரம் பந்தை அடிப்பேன் என்பது சக வீரர்கள் அறிவார்கள். என் மீது நம்பிக்கை வைத்து செயல்பட வேண்டும் என்பது எனக்கு தெரியும். ஒரு சிக்சர் வந்தால் எல்லாம் சரியாகி விடும் என்பதை அறிவேன். ஓரே ஓவரில் 5 சிக்சர்கள் அடித்தது வியப்பளித்தது. லெக் ஸ்பின்னர் (ரவி பிஷ்னோய்) பந்து வீச்சை குறி வைத்து அடிக்கும் படி எனக்கு பயிற்சியாளர் சொல்லி அனுப்பி இருந்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக அது முடியாமல் போனது’ என்றார்.

Next Story