எழுச்சி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?


எழுச்சி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
x
தினத்தந்தி 1 Oct 2020 10:38 PM GMT (Updated: 1 Oct 2020 10:38 PM GMT)

ஐ.பி.எல். போட்டி தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதன் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி அணிகளிடம் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. சென்னை அணியில் தொடக்க ஜோடியின் பேட்டிங் சொதப்பலாக உள்ளது. குறிப்பாக விஜய் (1, 21, 10 ரன்) மிகவும் மந்தமாக ஆடுகிறார். இதே போல் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா மூன்று ஆட்டங்களிலும் தொடர்ந்து 40 ரன்களுக்கு மேலாக வாரி வழங்கியது பின்னடைவாகும். கேப்டன் டோனி, கேதர் ஜாதவின் பார்மும் கவலைக்குரியதாகவே இருக்கிறது. மிடில் வரிசையில் பாப் டு பிளிஸ்சிஸ் மட்டும் நிலைத்து நின்று ஆடுகிறார். தசைப்பிடிப்பால் கடந்த இரு ஆட்டங்களில் ஆடாத அம்பத்தி ராயுடு குணமடைந்து விட்டதால் இன்றைய போட்டியில் களம் இறங்குகிறார். இது பேட்டிங் வரிசைக்கு பலம் சேர்க்கும். இதே போல் ஆல்-ரவுண்டர் வெய்ன் பிராவோவும் உடல்தகுதியை எட்டி விட்டதாக அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஹேசில்வுட் அல்லது ஆல்-ரவுண்டர் சாம் கர்ரன் ஆகியோரில் ஒருவரை கழற்றி விட்டால் தான் பிராவோ இடம் பிடிக்க முடியும். ஆனால் கேப்டன் டோனி அணியில் மாற்றம் செய்வாரா? என்பது சந்தேகம் தான். ஒரு வாரம் ஓய்வில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் புத்துணர்ச்சியுடன் களம் கண்டு எழுச்சி பெறுவார்களா? என்பதே ரசிகர்களின் ஆவலாகும்.

சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் நேற்று அளித்த பேட்டியில், ‘தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் அதுவும் வெவ்வேறு மைதானங்களில் விளையாடினோம். அதனால் ஆடுகளத்தன்மையை கணிப்பது கடினமாக இருந்தது. சரியான நேரத்தில் 6 நாள் ஓய்வு எங்களுக்கு கிடைத்தது. இது நல்ல விஷயமாகும். வெற்றிப்பாதைக்கு திரும்ப என்ன செய்ய வேண்டும் என்பதில் சில தெளிவு கிடைத்துள்ளது. அத்துடன் நன்றாக பயிற்சியும் மேற்கொண்டுள்ளோம். அடுத்த சில ஆட்டங்களை நாங்கள் தொடர்ந்து துபாய் மைதானத்தில் ஆட இருப்பது எங்களுக்கு உதவிகரமாக இருக்கும்’ என்றார்.

அதே சமயம் முதல் இரு ஆட்டங்களில் தோல்வி அடைந்த ஐதராபாத் அணி முந்தைய ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்சை 15 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் உத்வேகம் அடைந்துள்ளது. ரஷித் கானின் சுழல் ஜாலமும், தமிழக வீரர் நடராஜனின் யார்க்கர் பந்து வீச்சும் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு வித்திட்டது. கேப்டன் டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ, வில்லியம்சன், மனிஷ் பாண்டே என்று பேட்டிங்கிலும் ஐதராபாத் அணி வலுவாகவே உள்ளது. அதனால் இன்றைய ஆட்டம் கடும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இரவில் பனிப்பொழிவின் தாக்கத்தை மனதில் வைத்து ‘டாஸ்’ ஜெயிக்கும் அணிகள் பெரும்பாலும் 2-வது பேட்டிங்கையே விரும்புகின்றன. ஆனால் துபாயில் இதுவரை நடந்துள்ள 6 ஆட்டங்களிலும் முதலில் பேட் செய்த அணியே வெற்றி பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.

(நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்)

Next Story