கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத் அணியை சாய்த்தது மும்பை + "||" + IPL Cricket: Mumbai beat Hyderabad

ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத் அணியை சாய்த்தது மும்பை

ஐ.பி.எல். கிரிக்கெட்:  ஐதராபாத் அணியை சாய்த்தது மும்பை
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று மாலை நடந்த ஆட்டத்தில் மும்பை அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை சாய்த்து 3-வது வெற்றியை ருசித்தது.
சார்ஜா,

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று மாலை சார்ஜாவில் நடந்த 17-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்சை எதிர்கொண்டது. ஐதராபாத் அணியில் காயத்தால் அவதிப்படும் புவனேஷ்வர்குமாருக்கு பதிலாக சந்தீப் ஷர்மா சேர்க்கப்பட்டார்.

‘டாஸ்’ ஜெயித்த மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி ரோகித் சர்மாவும், குயின்டான் டி காக்கும் மும்பை அணியின் இன்னிங்சை தொடங்கினர். சந்தீப் ஷர்மா வீசிய முதல் ஓவரின் 4-வது பந்தில் சிக்சர் தூக்கிய ரோகித் சர்மா (6 ரன்) அடுத்த பந்தில் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவிடம் கேட்ச் ஆனார்.

அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் கணிசமான பங்களிப்பை அளித்து மும்பை அணியின் ஸ்கோரை உயர்த்தினர். குறைவான எல்லைக்கோடு தூரம், பேட்டிங்குக்கு உகந்த ஆடுகளம் என்பதால் பந்துகளை நாலாபுறமும் தெறிக்கவிட்டனர். சூர்யகுமார் யாதவ் 27 ரன்களும் (6 பவுண்டரி), டி காக் 67 ரன்களும் (39 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), இஷான் கிஷன் 31 ரன்களும் (ஒரு பவுண்டரி, 2 சிக்சர்), ஹர்திக் பாண்ட்யா 28 ரன்களும் (2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஆட்டம் இழந்தனர். சித்தார்த் கவுலின் ஓவரில் கடைசி 4 பந்துகளை சந்தித்த குருணல் பாண்ட்யா 2 சிக்சர், 2 பவுண்டரி விரட்டியடித்து அமர்க்களப்படுத்தியதோடு 200 ரன்களையும் கடக்க வைத்தார். 20 ஓவர் முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. குருணல் பாண்ட்யா 20 ரன்னுடனும் (4 பந்து), பொல்லார்ட் 25 ரன்களுடனும் (13 பந்து, 3 சிக்சர்) களத்தில் இருந்தனர்.

ஐதராபாத் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் (4 ஓவரில் 22 ரன்னுக்கு ஒரு விக்கெட்), தமிழக வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் (4 ஓவரில் 29 ரன்) ஆகியோர் மட்டும் கொஞ்சம் கட்டுக்கோப்புடன் பந்து வீசினர்.

பின்னர் 209 ரன்கள் இலக்கை நோக்கி களம் கண்ட ஐதராபாத் அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் சரிந்தன. பேர்ஸ்டோ 25 ரன்னிலும், மனிஷ் பாண்டே 30 ரன்னிலும், வில்லியம்சன் 3 ரன்னிலும், பிரியம் கார்க் 8 ரன்னிலும் வெளியேறினர். ரன்தேவை அதிகரித்துக் கொண்டே வந்தாலும் கேப்டன் டேவிட் வார்னர் மட்டும் ஒரு பக்கம் நிலைத்து நின்று போராடிக் கொண்டிருந்தார்.

16-வது ஓவரில் வார்னர் (60 ரன், 44 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) பேட்டின்சனின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். அவர் அடித்த பந்தை ‘ஷாட் தேர்டுமேன்’ பகுதியில் நின்ற இஷான் கிஷன் பாய்ந்து விழுந்து பிரமாதமாக கேட்ச் செய்தார். அத்துடன் ஐதராபாத்தின் நம்பிக்கை சிதைந்தது. 20 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட்டுக்கு 174 ரன்களே எடுத்தது. இந்த ஐ.பி.எல்.-ல் சார்ஜா மைதானத்தில் 200 ரன்களை தொடாத ஒரே அணி ஐதராபாத் தான். இதன் மூலம் மும்பை அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் புள்ளி பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியது. மும்பை தரப்பில் டிரென்ட் பவுல்ட், பும்ரா, பேட்டின்சன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பவுல்ட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.