பஞ்சாப்பின் பரிதாபம் தொடருகிறது: கொல்கத்தா அணி ‘திரில்’ வெற்றி


பஞ்சாப்பின் பரிதாபம் தொடருகிறது: கொல்கத்தா அணி ‘திரில்’ வெற்றி
x
தினத்தந்தி 10 Oct 2020 10:15 PM GMT (Updated: 10 Oct 2020 7:37 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா அணி 2 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப்பை தோற்கடித்தது.

அபுதாபி, 

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று மாலை அபுதாபியில் நடந்த 24-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த ஆட்டத்திலும் பஞ்சாப் அணியில் கிறிஸ் கெய்ல் சேர்க்கப்படவில்லை. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி ஆரம்பத்தில் தடுமாறியது. முந்தைய ஆட்டத்தின் ஹீரோ திரிபாதி (4 ரன்) முகமது ஷமியின் பந்து வீச்சில கிளீன் போல்டு ஆனார். அடுத்து வந்த நிதிஷ் ராணா (2 ரன்) ரன்-அவுட்டில் வீழ்ந்தார். பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் கொல்கத்தா 2 விக்கெட்டுக்கு 25 ரன்களே எடுத்திருந்தது. இந்த சீசனில் பவர்-பிளேயில் கொல்கத்தாவின் மோசமான ஸ்கோர் இது தான். இயான் மோர்கனும் (24 ரன், 23 பந்து) பெரிய அளவில் சோபிக்கவில்லை. அப்போது கொல்கத்தா 3 விக்கெட்டுக்கு 63 ரன்களுடன் (10.4 ஓவர்) தவித்தது.

இந்த சூழலில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில்லுடன், கேப்டன் தினேஷ் கார்த்திக் இணைந்தார். இருவரும் அணியை சரிவில் இருந்து அழகாக மீட்டனர். ரன்ரேட்டை எகிற வைக்கும் முனைப்புடன் அதிரடி காட்டிய தினேஷ் கார்த்திக் 22 பந்துகளில் அரைசதத்தை கடந்து அசத்தினார். நடப்பு தொடரில் அவரது முதல் அரைசதம் இதுவாகும். அணியின் ஸ்கோர் 145 ரன்களை எட்டிய போது சுப்மான் கில் (57 ரன், 47 பந்து, 5 பவுண்டரி) ரன்-அவுட் ஆனார். அடுத்து வந்த ‘அதிரடி புயல்’ ரஸ்செல் (5 ரன்) ஏமாற்றினார். அணியை கவுரவமான நிலைக்கு கொண்டு சென்ற தினேஷ் கார்த்திக் (58 ரன், 29 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) கடைசி பந்தில் ரன்-அவுட் ஆனார். 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுக்கு 164 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 165 ரன்கள் இலக்கை நோக்கி பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் லோகேஷ் ராகுலும், மயங்க் அகர்வாலும் நுழைந்தனர். இருவரும் அவசரம் காட்டாமல் ஏதுவான பந்துகளை மட்டும் விரட்டியதால் ஸ்கோர் சீராகவே நகர்ந்தது. மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் சுனில் நரின், வருண் சக்ரவர்த்தி சற்று கட்டுப்படுத்தினர். இருப்பினும் இவர்கள் ஆடிய விதம் பஞ்சாப்புக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக தென்பட்டது. 12.2 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை தொட்டது. இருவரும் அரைசதமும் அடித்தனர்.

முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் (14.2 ஓவர்) திரட்டிய இந்த ஜோடியை வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா பிரித்தார். அவரது பந்து வீச்சை தூக்கியடித்து மயங்க் அகர்வால் (56 ரன், 39 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்து வந்த நிகோலஸ் பூரனை (16 ரன்), சுனில் நரின் கபளீகரம் செய்தார். அந்த ஓவரில் (18-வது ஓவர்) வெறும் 2 ரன் மட்டுமே எடுக்கப்பட்டதால் பஞ்சாப் நெருக்கடிக்குள்ளானது. 19-வது ஓவரில் விக்கெட் கீப்பர் சிம்ரன்சிங் (4 ரன்), கேப்டன் லோகேஷ் ராகுல் (74 ரன், 58 பந்து, 6 பவுண்டரி) வெளியேற பதற்றம் தொற்றியது. இந்த ஓவரில் 6 ரன் மட்டுமே வந்தது.

கடைசி ஓவரில் பஞ்சாப்பின் வெற்றிக்கு 14 ரன் தேவைப்பட்டது. பரபரப்பான 20-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரின் வீசினார். இதில் முதல் பந்தில் 2 ரன் எடுத்த மேக்ஸ்வெல், அடுத்த பந்தை விளாச முயற்சித்து ஏமாந்தார். 3-வது பந்தில் பவுண்டரி விரட்டினார். 4-வது பந்தில் லெக்-பை வகையில் ஒரு ரன் கிடைத்தது. 5-வது பந்தை சந்தித்த மன்தீப்சிங் (0) தூக்கியடித்து கேட்ச் ஆகிப்போனார். இதனால் கடைசி பந்தில் பஞ்சாப்பின் வெற்றிக்கு 7 ரன் தேவைப்பட்டது. பந்து சிக்சருக்கு பறந்தால் சூப்பர் ஓவருக்கு போகும் என்ற நிலைமையில் இறுதிபந்தை எதிர்கொண்ட மேக்ஸ்வெல் ஆப்-சைடில் ஓங்கி அடித்தார். துரதிர்ஷ்டவசமாக பந்து எல்லைக்கோட்டுக்கு இரண்டு இன்சுக்கு முன்பாக பிட்ச் ஆகி மயிரிழையில் அது பவுண்டரியாக மாறிப்போனது. இதனால் மேக்ஸ்வெல் (10 ரன், நாட்-அவுட்) நொந்து போனார். பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 162 ரன்களே எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி 2 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்தது. பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளும், சுனில் நரின் 4 ஓவர்களில் 28 ரன்னுக்கு 2 விக்கெட்டும் சாய்த்தனர். தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகன் விருதை பெற்றார். 6-வது லீக்கில் ஆடிய கொல்கத்தாவுக்கு இது 4-வது வெற்றியாகும். புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள பஞ்சாப்புக்கு விழுந்த 6-வது அடியாகும்.

Next Story