ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணி 5-வது தோல்வி பெங்களூருவிடமும் வீழ்ந்தது


ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணி 5-வது தோல்வி பெங்களூருவிடமும் வீழ்ந்தது
x
தினத்தந்தி 10 Oct 2020 10:30 PM GMT (Updated: 10 Oct 2020 7:40 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு அணியிடமும் தோல்வியை தழுவியது.

துபாய், 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு துபாயில் அரங்கேறிய 25-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்தித்தது. சென்னை அணியில் ஒரே ஒரு மாற்றமாக கேதர் ஜாதவுக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த ஜெகதீசன் சேர்க்கப்பட்டார். இதில் ‘டாஸ்’ ஜெயித்த பெங்களூரு கேப்டன் விராட் கோலி பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய பெங்களூரு அணி சென்னை அணியின் பந்து வீச்சில் திணறியது. ஆரோன் பிஞ்ச் (2 ரன்), தீபக் சாஹர் வீசிய இன்ஸ்விங்குக்கு காலியானார். தேவ்தத் படிக்கல் (33 ரன்), டிவில்லியர்ஸ் (0), வாஷிங்டன் சுந்தர் (10 ரன்) சீரான இடைவெளியில் நடையை கட்டினர்.

இதற்கு மத்தியில் கேப்டன் விராட் கோலி மட்டும் நிலைத்து நின்று போராடினார். 15-வது ஓவர் வரை ஆட்டம் சென்னை அணியின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது 4 விக்கெட்டுக்கு 95 ரன்கள் எடுத்திருந்ததை பார்த்த போது அந்த அணி 150 ரன்களை கடக்குமா? என்பதே கேள்விக்குறியாக தெரிந்தது.

ஆனால் கடைசி கட்டத்தில் கோலி ரன்வேட்டை நடத்தி ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். சாம் கர்ரன், ஷர்துல் தாகூர் ஓவர்களில் பந்தை எல்லைக்கோட்டுக்கு பறக்க விட்டார். அவருக்கு ஆல்-ரவுண்டர் ஷிவம் துபேவும் (22 ரன், 14 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஒத்துழைப்பு தந்தார். 20 ஓவர்களில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுக்கு 169 ரன்கள் குவித்தது. விராட் கோலி 90 ரன்களுடன் (52 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) களத்தில் இருந்தார். கடைசி 4 ஓவர்களில் மட்டும் 66 ரன்கள் திரட்டினர். சென்னை தரப்பில் ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டும், தீபக் சாஹர், சாம்கர்ரன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 170 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி மறுபடியும் சொதப்பியது. தொடக்க வீரர்கள் பிளிஸ்சிஸ் ( 8 ரன்), ஷேன் வாட்சன் (14 ரன்) இருவரும் வாஷிங்டன் சுந்தரின் சுழற்பந்து வீச்சில் ஆட்டம் இழந்தனர். இந்த பேரிடியால் சென்னை அணியின் ரன்வேகம் மந்தமானது.

இதைத் தொடர்ந்து அம்பத்தி ராயுடுவும், ஜெகதீசனும் ஜோடி சேர்ந்து அணியின் சரிவை தடுத்தனர். ஆனால் பெங்களூரு பந்து வீச்சை அடித்து நொறுக்க முடியாமல் திண்டாடினர். 10 ஓவர் வரை ரன்ரேட் 6-க்கும் குறைவாகவே இருந்தது.

ஸ்கோர் 89 ரன்களை (14.2 ஓவர்) எட்டிய போது ஜெகதீசன் (33 ரன், 28 பந்து, 4 பவுண்டரி) ரன்-அவுட் செய்யப்பட்டார். அடுத்து வந்த டோனி (10 ரன்) யுஸ்வேந்திர சாஹலின் பந்து வீச்சில் ஒரு சிக்சர் அடித்து விட்டு மீண்டும் சிக்சருக்கு முயற்சித்து விக்கெட்டை தாரை வார்த்தார்.

அத்துடன் சென்னை அணி முழுமையாக தடம் புரண்டது. சாம் கர்ரன் (0), ரவீந்திர ஜடேஜா (7 ரன்), பிராவோ (7 ரன்) ஆகியோரும் கைகொடுக்கவில்லை. அதிகபட்சமாக அம்பத்தி ராயுடு 42 ரன்கள் (40 பந்து, 4 பவுண்டரி) எடுத்தார். 20 ஓவர்களில் சென்னை அணி 8 விக்கெட்டுக்கு 132 ரன்னில் முடங்கியது. இதன் மூலம் பெங்களூரு அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு தரப்பில் கிறிஸ் மோரிஸ் 3 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 6-வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு அணிக்கு இது 4-வது வெற்றியாகும். 7-வது லீக்கில் விளையாடிய சென்னை அணிக்கு 5-வது தோல்வியாகும்.

Next Story