ஐ.பி.எல். கிரிக்கெட்: கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றி பரபரப்பான ஆட்டத்தில் ஐதராபாத்தை சாய்த்தது


ஐ.பி.எல். கிரிக்கெட்: கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றி பரபரப்பான ஆட்டத்தில் ஐதராபாத்தை சாய்த்தது
x
தினத்தந்தி 11 Oct 2020 10:00 PM GMT (Updated: 11 Oct 2020 8:47 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத்துக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி ஒரு பந்து மீதம் வைத்து திரில் வெற்றியை சுவைத்தது.

துபாய், 

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று மாலை துபாயில் நடந்த 26-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் ஐதராபாத் சன்ரைசர்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதின. தனிமைப்படுத்தும் நடைமுறை முடிந்ததால் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ராஜஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டார்.

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 54 ரன்களும் (44 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் டேவிட் வார்னர் 48 ரன்களும் (38 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.

அடுத்து களம் இறங்கிய ராஜஸ்தானுக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அதிரடி வீரர் பென் ஸ்டோக்ஸ் 5 ரன்னில் கலீல் அகமதுவின் வேகப்பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்து வந்த கேப்டன் ஸ்டீவன் சுமித் (5 ரன்) 2-வது ரன்னுக்கு ஆசைப்பட்டு விக்கெட்டை ரன்அவுட்டில் பறிகொடுத்தார். தொடர்ந்து ஜோஸ் பட்லரும் (16 ரன்) வெளியேற, 26 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. இதன் பின்னர் ஓரளவு அணியை மீட்ட உத்தப்பாவும் (18 ரன்), சஞ்சு சாம்சனும் (26 ரன்) அடுத்தடுத்து நடையை கட்டியதால் மறுபடியும் சிக்கலுக்குள்ளானது. அப்போது ராஜஸ்தான் 78 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை (12 ஓவர்) இழந்திருந்தது. ஆட்டம் ஐதராபாத் பக்கம் திரும்புவது போல் தோன்றியது.

இந்த சூழலில் ராகுல் திவேதியாவும், ரியான் பராக்கும் கைகோர்த்து ஆட்டத்தின் போக்கை மாற்றிக்காட்டினர். கடைசி 4 ஓவர்களில் ராஜஸ்தானின் வெற்றிக்கு 54 ரன் தேவைப்பட்டது. சந்தீப் ஷர்மா வீசிய 17-வது ஓவரில் இருவரும் சேர்ந்து 18 ரன் திரட்டினர். அடுத்து ரஷித்கானின் சுழற்பந்து வீச்சில் திவேதியா ‘ஹாட்ரிக்’ பவுண்டரி சாத்தினார். 19-வது ஓவரை வீச வாய்ப்பு பெற்ற தமிழக வீரர் டி.நடராஜன் யார்க்கராக வீச முயற்சித்து புல்டாஸ்களை போட்டார். இந்த ஓவரில் பவுண்டரி, சிக்சர் உள்பட 14 ரன் வந்தது. கடைசி ஓவரில் ராஜஸ்தானின் வெற்றிக்கு 8 ரன் தேவைப்பட்டது. பரபரப்பான 20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது வீசினார். இதில் முதல் 4 பந்துகளில் 6 ரன் எடுத்தனர். 5-வது பந்தை ரியான் பராக் சிக்சருக்கு அனுப்பி இலக்கை எட்ட வைததார்.

ராஜஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 163 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராகுல் திவேதியா 45 ரன்களுடனும் (28 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), ரியான் பராக் 42 ரன்னுடனும் (26 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர். 7-வது லீக்கில் ஆடிய ராஜஸ்தானுக்கு இது 3-வது வெற்றியாகும். தொடர்ந்து 4 ஆட்டங்களில் தோற்றிருந்த அந்த தோல்விப்பயணத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. ஐதராபாத் அணிக்கு 4-வது தோல்வியாகும்.

Next Story