ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அணி 5-வது வெற்றி கொல்கத்தாவை வீழ்த்தியது


ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அணி 5-வது வெற்றி கொல்கத்தாவை வீழ்த்தியது
x
தினத்தந்தி 12 Oct 2020 10:30 PM GMT (Updated: 12 Oct 2020 7:37 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று கொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூரு அணி 5-வது வெற்றியை ருசித்தது.

சார்ஜா,

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சார்ஜாவில் நேற்று இரவு நடந்த 28-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொண்டது. பந்து வீச்சு விதிமுறைக்கு மாறாக இருப்பதாக கடந்த ஆட்டத்தில் நடுவர்களால் புகார் செய்யப்பட்ட கொல்கத்தா அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரின் நீக்கப்பட்டு பேட்ஸ்மேன் டாம் பான்டன் சேர்க்கப்பட்டார். பெங்களூரு அணியில் குர்கீரத் சிங் மானுக்கு பதிலாக முகமது சிராஜ் இடம் பெற்றார்.

‘டாஸ்’ ஜெயித்த பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி ஆரோன் பிஞ்ச், தேவ்தத் படிக்கல் ஆகியோர் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரில் பவுண்டரி அடித்து ரன் கணக்கை தொடங்கிய ஆரோன் பிஞ்ச், பிரசித் கிருஷ்ணா வீசிய அடுத்த ஓவரில் சிக்சர் தூக்கி அசத்தினார். கம்மின்ஸ் ஓவரிலும், பிரசித் கிருஷ்ணா ஓவரிலும் தேவ்தத் படிக்கல் தொடர்ச்சியாக 2 பவுண்டரிகளை விரட்டினார். பவர்பிளேயில் (முதல் 6 ஓவரில்) அந்த அணி விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் எடுத்தது.

ரஸ்செல் வீசிய ஓவரில் முதல் பந்தில் சிக்சர் தூக்கிய தேவ்தத் படிக்கல் (32 ரன்கள், 23 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) அதே ஓவரில் போல்டு ஆனார். அடுத்து கேப்டன் விராட்கோலி களம் இறங்கினார். நன்றாக ஆடிய ஆரோன் பிஞ்ச் 37 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 47 ரன்கள் எடுத்த நிலையில் பிரசித் கிருஷ்ணா பந்து வீச்சில் போல்டு ஆனார். அப்போது அணியின் ஸ்கோர் 94 ரன்னாக (12.2 ஓவரில்) இருந்தது.

இதைத்தொடர்ந்து டிவில்லியர்ஸ், கோலியுடன் இணைந்தார். டிவில்லியர்ஸ் அதிரடியாக மட்டையை சுழற்றினார். அவர் கம்லேஷ் நாகர்கோட்டி மற்றும் கம்மின்ஸ் ஓவரில் தலா 2 சிக்சர்கள் தூக்கி கலக்கினார். அவர் அடித்த ஒரு சிக்சர் மைதானத்துக்கு வெளியே பறந்து காரை பதம் பார்த்தது. அத்துடன் ரஸ்செல் ஓவரில் டிவில்லியர்ஸ் சிக்சர் விளாசி 23 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். நடப்பு தொடரில் அவர் அடித்த 3-வது அரைசதம் இதுவாகும். வழக்கமாக ஆக்ரோஷமாக ஆடக்கூடிய விராட்கோலியின் ஆட்டத்தில் நேற்று வேகம் குறைவாகவே தெரிந்தது. அவர் டிவில்லியர்சுக்கு பக்கபலமாக இருந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது. கடைசி 5 ஓவர்களில் 83 ரன்கள் திரட்டப்பட்டது. விராட்கோலி 28 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 33 ரன்களும், டிவில்லியர்ஸ் 33 பந்துகளில் 5 பவுண்டரி, 6 சிக்சருடன் 73 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

பின்னர் 195 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தன. டாம் பான்டன் 8 ரன்னிலும், நிதிஷ் ராணா 9 ரன்னிலும், சுப்மான் கில் 34 ரன்னிலும் (25 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), தினேஷ் கார்த்திக் 1 ரன்னிலும், இயான் மோர்கன் 8 ரன்னிலும், ரஸ்செல் 16 ரன்னிலும், கம்மின்ஸ் 1 ரன்னிலும், ராகுல் திரிபாதி 16 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

20 ஓவர்களில் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்புக்கு 112 ரன்களே எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பெங்களூரு அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் மோரிஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.

7-வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு அணி பெற்ற 5-வது வெற்றி இதுவாகும். கொல்கத்தா அணி 3-வது தோல்வியை சந்தித்தது.

Next Story