ஐதராபாத் அணிக்கு பதிலடி கொடுக்குமா சென்னை?


ஐதராபாத் அணிக்கு பதிலடி கொடுக்குமா சென்னை?
x
தினத்தந்தி 12 Oct 2020 11:30 PM GMT (Updated: 12 Oct 2020 8:00 PM GMT)

3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சை வீழ்த்தி வெற்றிகரமாக போட்டியை தொடங்கியது.

3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சை வீழ்த்தி வெற்றிகரமாக போட்டியை தொடங்கியது. ஆனால் அதன் பிறகு ராஜஸ்தான், டெல்லி, ஐதராபாத் அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து விமர்சனத்துக்கு உள்ளானது. தனது 5-வது லீக் ஆட்டத்தில் திடீரென எழுச்சி பெற்ற சென்னை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை பந்தாடியது. அதனை அடுத்து சென்னை அணி மீண்டும் பழைய மோசமான நிலைக்கே திரும்பியது. கொல்கத்தா, பெங்களூரு அணிகளிடம் அடுத்தடுத்து வீழ்ந்தது. 7 ஆட்டங்களில் ஆடி இருக்கும் சென்னை அணி 2 வெற்றி, 5 தோல்வி என்று 4 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது.

சென்னை அணியின் பேட்டிங் மெச்சும் வகையில் இல்லை. பேட்டிங்கில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம் என்று அந்த அணியின் கேப்டன் டோனியே ஒப்புக்கொண்டு இருக்கிறார். பிளிஸ்சிஸ் (307 ரன்கள்) மட்டுமே பேட்டிங்கில் நன்றாக செயல்பட்டு வருகிறார். மிடில் ஆர்டர் பேட்டிங் மிகவும் பலவீனமாக இருக்கிறது. ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, டோனி, கேதர் ஜாதவ் ஆகியோரின் பேட்டிங் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையவில்லை. கடந்த ஆட்டத்தில் நீக்கப்பட்ட கேதர் ஜாதவ் இந்த ஆட்டத்தில் இடம்பெறுவாரா? என்பது தெரியவில்லை. பந்து வீச்சில் ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், சாம் கர்ரன் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டாலும், தொடக்கம் மற்றும் கடைசி கட்டத்தில் கட்டுக்கோப்பாக பந்து வீசாமல் ரன்களை விட்டுக்கொடுத்து விடுகிறார்கள். ரவீந்திர ஜடேஜா, வெய்ன் பிராவோ ஆகியோரும் சோபிக்கவில்லை. அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டு போய் இருக்கும் சென்னை அணி தனது தவறுகளை திருத்தி வலுவாக களம் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அந்த அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பி அசத்தும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருக்கிறார்கள்.

டேவிட் வார்னர் தலைமையிலான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 7 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி (டெல்லி, சென்னை, பஞ்சாப் அணிகளுக்கு எதிராக), 4 தோல்வி (பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, ராஜஸ்தான் அணிகளிடம்) கண்டு 6 புள்ளிகள் பெற்று இருக்கிறது. நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் பணிந்தது. ஐதராபாத் அணியில் பேட்டிங்கில் டேவிட் வார்னர் (275 ரன்கள்), பேர்ஸ்டோ (257 ரன்கள்), மனிஷ் பாண்டே (202 ரன்கள்) ஆகியோரும், பந்து வீச்சில் ரஷித் கான் (10 விக்கெட்), நடராஜன் (7 விக்கெட்) கலீல் அகமது ( 6 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். குறிப்பாக ரஷித் கான் தனது மாயாஜால சுழற்பந்து வீச்சு மூலம் எதிரணியினருக்கு கடும் குடைச்சல் கொடுத்து வருகிறார். நடராஜன் துல்லியமான யார்க்கர் பந்து வீச்சில் மிரட்டுகிறார். கேன் வில்லியம்சன், பிரியம் கார்க் ஆகியோர் நிலைத்து நின்று ஆடினால் ஐதராபாத் அணியின் பேட்டிங் மேலும் வலுப்பெறும்.

சென்னைக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. அந்த நம்பிக்கையுடன் களம் இறங்கும் ஐதராபாத் அணி தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட முயற்சிக்கும். அதேநேரத்தில் முந்தைய லீக் ஆட்டத்தில் ஐதராபாத்திடம் கண்டு இருந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து வெற்றிப் பாதைக்கு திரும்ப சென்னை அணி எல்லா வகையிலும் தீவிரம் காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

Next Story