டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி திட்டமிட்டபடி நடக்கும்: ஐ.சி.சி. தகவல்


டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி திட்டமிட்டபடி நடக்கும்: ஐ.சி.சி. தகவல்
x
தினத்தந்தி 13 Oct 2020 10:52 PM GMT (Updated: 13 Oct 2020 10:52 PM GMT)

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி திட்டமிட்டபடி நடக்கும் என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

துபாய், 

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி 9 அணிகள் இடையே நடந்து வருகிறது. குறிப்பிட்ட டெஸ்ட் தொடர்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு அதன் முடிவுக்கு ஏற்ப புள்ளிகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு அணிகளும் 6 தொடர்களில் விளையாட வேண்டும். இதுவரை 4 தொடர்களில் ஆடியுள்ள இந்திய அணி 360 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 296 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், இங்கிலாந்து 292 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன. கொரோனா அச்சத்தால் பல போட்டிகள் ரத்து செய்யப்பட்டும், சில தொடர்கள் தள்ளிவைக்கப்பட்டும் உள்ளன. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை ஒத்திபோட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டன. ஆனால் திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு (2021) ஜூன் மாதம் லண்டனில் இறுதிப்போட்டி நடத்தப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அறிவித்துள்ளது. இது குறித்து ஐ.சி.சி. செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை திட்டமிட்டபடி நடத்துவதை நோக்கி பயணிக்கிறோம். எப்படி புள்ளிகளை பகிர்வது, தள்ளிவைக்கப்பட்ட போட்டிகளை நடத்துவது குறித்து விரைவில் தெளிவான அறிவிப்பு வெளியிடப்படும்’ என்றார்.


Next Story