கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது வெற்றி: ஐதராபாத்துக்கு பதிலடி கொடுத்தது + "||" + IPL Cricket: Chennai Super Kings 3rd win: Revenge for Hyderabad

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது வெற்றி: ஐதராபாத்துக்கு பதிலடி கொடுத்தது

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது வெற்றி: ஐதராபாத்துக்கு பதிலடி கொடுத்தது
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3-வது வெற்றியை பதிவு செய்தது.
துபாய், 

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு துபாயில் அரங்கேறிய 29-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், ஐதராபாத் சன்ரைசர்சும் மல்லுகட்டின. சென்னை அணியில் ஒரே ஒரு மாற்றமாக தமிழக வீரர் ஜெகதீசன் நீக்கப்பட்டு சுழற்பந்து வீச்சாளர் பியுஷ் சாவ்லா சேர்க்கப்பட்டார். ‘டாஸ்’ ஜெயித்த சென்னை கேப்டன் டோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த சீசனில் சென்னை அணி முதலில் பேட் செய்வது இதுவே முதல்தடவையாகும்.

அது மட்டுமின்றி இந்த முறை தொடக்க வரிசையிலும் மாற்றம் செய்யப்பட்டது, வாட்சன் 2-வது வரிசைக்கு தள்ளப்பட்டார். இதையடுத்து சாம் கர்ரனும், பாப் டு பிளிஸ்சிஸ்சும் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். இந்த புதிய வியூகத்துக்கும் பலன் கிடைக்கவில்லை. பிளிஸ்சிஸ் (0) சந்தித்த முதல் பந்திலேயே விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவிடம் சிக்கினார். இதன் பின்னர் சாம் கர்ரனுடன், ஷேன் வாட்சன் இணைந்தார். கலீல் அகமதுவின் ஒரே ஓவரில் 2 பவுண்டரி, 2 சிக்சர் விரட்டி அமர்க்களப்படுத்திய சாம்கர்ரன் (31 ரன், 21 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) சந்தீப் ஷர்மாவின் பந்து வீச்சில் ஏமாந்து போல்டு ஆகிப்போனார்.

இதைத் தொடர்ந்து வாட்சனும், அம்பத்தி ராயுடும் கைகோர்த்து மிடில் ஓவர்களில் அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் நகர்த்தினர். கடினமான கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பித்த இவர்கள், ரஷித்கானின் சுழலில் சிக்சரை பறக்க விட்டு அசத்தினர். அணியின் ஸ்கோர் 116 ரன்களாக (15.2 ஓவர்) உயர்ந்த போது அம்பத்தி ராயுடு 41 ரன்களில் (34 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். தொடர்ந்து ஷேன் வாட்சனும் (42 ரன், 38 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) வெளியேறினார். அவர் தமிழகத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் வீசிய புல்டாஸ் பந்து வீச்சில் கேட்ச் ஆனார்.

இதன் பின்னர் கேப்டன் டோனியும், ரவீந்திர ஜடேஜாவும் ஸ்கோரை உயர்த்துவதில் கவனம் செலுத்தினர். நடராஜனின் ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரி ஓடவிட்ட டோனி அவரது மற்றொரு ஓவரில் 102 மீட்டர் தூரத்திற்கு பிரமாதமான ஒரு சிக்சரை நொறுக்கினார். ஆனால் அடுத்த பந்திலேயே நடராஜன் பழிதீர்த்துக் கொண்டார். ஆப்-சைடில் சற்று புல்டாசாக விழுந்த பந்தை டோனி (21 ரன், 13 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) அடித்த போது சரியாக ‘கிளிக்’ ஆகாத அந்த பந்தை வில்லியம்சன் கேட்ச் செய்தார். பின்னர் இறங்கிய வெய்ன் பிராவோ டக்-அவுட் ஆனாலும் கடைசி ஓவரில் ஜடேஜா பவுண்டரி, சிக்சர் அடித்து அணியின் ஸ்கோரை 160 ரன்களை கடக்க வைத்தார்.

20 ஓவர் முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா 25 ரன்களுடனும் (10 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), தீபக் சாஹர் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ஐதராபாத் தரப்பில் டி.நடராஜன், சந்தீப் ஷர்மா, கலீல் அகமது தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அடுத்து 168 ரன்கள் இலக்கை நோக்கி களம் கண்ட ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை சென்னை பவுலர்கள் சீக்கிரமாகவே கபளீகரம் செய்தனர். கேப்டன் டேவிட் வார்னர் (9 ரன்), சாம்கர்ரனின் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் பேர்ஸ்டோ (23 ரன்) ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் கிளீன் போல்டு ஆனார். இதற்கிடையே 2-வது விக்கெட்டுக்கு இறங்கிய மனிஷ் பாண்டே (4 ரன்) ரன்-அவுட் ஆனார். ஒரு கட்டத்தில் 59 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து தத்தளித்த ஐதராபாத் அணிக்கு கேன் வில்லியம்சன் நம்பிக்கை கொடுத்தார். நேர்த்தியாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டார். இருப்பினும் ரன்தேவை அதிகரித்துக் கொண்டே போனதால் அவரும் நெருக்கடிக்குள்ளானார். மறுமுனையில் பிரியம் கார்க் 16 ரன்னிலும், விஜய் சங்கர் 12 ரன்னிலும் வீழ்ந்தனர்.

சென்னை அணியினரை அச்சுறுத்திக்கொண்டிருந்த வில்லியம்சன்( 57 ரன், 39 பந்து, 7 பவுண்டரி) 18-வது ஓவரில் கரண் ஷர்மாவின் பந்து வீச்சை சிக்சருக்கு அடிக்க முயற்சித்து கேட்ச் ஆனார். அதன் பிறகே சென்னை வீரர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அடுத்து வந்த ரஷித்கான் 14 ரன்னில் அவுட் ஆனார். பரபரப்பான கடைசி ஓவரில் ஐதராபாத்தின் வெற்றிக்கு 22 ரன் தேவைப்பட்டது. இந்த ஓவரை வீசிய மிதவேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பிராவோ ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டும் வீழ்த்தி சிக்கலின்றி வெற்றியை உறுதி செய்தார்.

ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 147 ரன்களே எடுத்தது. இதன் மூலம் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது. சென்னை தரப்பில் கரண் ஷர்மா, வெய்ன் பிராவோ தலா 2 விக்கெட்டும், சாம் கர்ரன், ஜடேஜா, ஷர்துல் தாகூர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 8-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணிக்கு இது 3-வது வெற்றியாகும். ஏற்கனவே இதே மைதானத்தில் ஐதராபாத்திடம் 7 ரன் வித்தியாசத்தில் அடைந்த தோல்விக்கும் சுடச்சுட பதிலடிகொடுத்து விட்டது. ஐதராபாத்துக்கு இது 5-வது தோல்வியாகும்.


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். கிரிக்கெட்: ரெய்னாவை தக்கவைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் அணியில் சுமித் விடுவிப்பு
அடுத்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா தக்கவைக்கப்பட்டு உள்ளார். ராஜஸ்தான் அணியில் சுமித்தும், பஞ்சாப் அணியில் மேக்ஸ்வெல்லும் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
2. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 2 புதிய அணிகள்? - கிரிக்கெட் வாரிய பொதுக்குழு கூட்டத்தில் 24-ந்தேதி ஆலோசனை
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இரண்டு புதிய அணிகளை சேர்ப்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
3. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மேலும் ஒரு அணியை சேர்க்க திட்டம்?
அடுத்த ஐ.பி.எல். போட்டியின் போது கூடுதலாக ஒரு அணியை சேர்க்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
4. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 5-வது முறையாக சாம்பியன்: ‘எங்களது திட்டத்தை பந்து வீச்சாளர்கள் நிறைவாக செயல்படுத்தினார்கள்’ - கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு
‘எங்களது திட்டத்தை பந்து வீச்சாளர்கள் நிறைவாக செயல்படுத்தினார்கள்’ என்று சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பாராட்டினார்.
5. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அசத்திய இந்திய இளம் வீரர்கள்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அசத்திய இந்திய இளம் வீரர்கள்.