‘வைடு’ முடிவை எதிர்த்து அப்பீல் செய்ய கேப்டனுக்கு வாய்ப்பு: விராட் கோலி வலியுறுத்தல்


‘வைடு’ முடிவை எதிர்த்து அப்பீல் செய்ய கேப்டனுக்கு வாய்ப்பு: விராட் கோலி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 14 Oct 2020 11:12 PM GMT (Updated: 14 Oct 2020 11:12 PM GMT)

‘வைடு’ முடிவை எதிர்த்து அப்பீல் செய்ய கேப்டனுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று விராட் கோலி வலியுறுத்தி உள்ளார்.

துபாய், 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 19-வது ஓவரில் சென்னை பவுலர் ஷர்துல் தாகூர் ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசிய பந்துக்கு நடுவர் வைடு கொடுப்பது போல் கையை லேசாக விரித்தார். அதற்குள் சென்னை அணியின் கேப்டன் டோனி இது சரியான பந்து தானே என்பது போல் தனது அதிருப்தியை வெளிப்படுத்த, சுதாரித்துக் கொண்ட நடுவர் பால் ரீபெல் முடிவை மாற்றிக்கொண்டு வைடு வழங்கவில்லை. அதே சமயம் நடுவரின் இந்த செயலால் ஐதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் எரிச்சல் அடைந்தார்.

இந்த சர்ச்சை குறித்து பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலியிடம் நேற்று கேட்ட போது, ‘வைடு மற்றும் இடுப்பு உயரத்துக்கு மேலாக வீசப்படும் புல்டாஸ்கள் விஷயத்தில் நடுவர்கள் எடுக்கும் முடிவு திருப்தி அளிக்காத போது அதை எதிர்த்து அப்பீல் செய்யும் வாய்ப்பை கேப்டன்களுக்கு வழங்க வேண்டும், 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்த புதிய விதிமுறையை கொண்டு வர வேண்டும்’ என்று வலியுறுத்தினார். ஏனெனில் ஐ.பி.எல். போன்ற பெரிய போட்டிகளில் சிறு விஷயம் கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடும். ஒரு முடிவை எதிர்த்து அப்பீல் செய்ய முடியாமல் போகும் போது அதனால் ஆட்டத்தின் முடிவே மாறி விடலாம் என்றும் குறிப்பிட்டார்.

பஞ்சாப் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் இன்னொரு யோசனையை முன் வைத்தார். ஒரு பேட்ஸ்மேன் 100 மீட்டர் தூரத்திற்கு மேலாக சிக்சர் அடிக்கும் போது அதற்கு கூடுதலாக ரன் வழங்க வேண்டும் என்று கூறினார்.


Next Story