‘கூட்டு முயற்சியால் வெற்றி கிடைத்தது’ - டெல்லி அணியின் பொறுப்பு கேப்டன் தவான் கருத்து


‘கூட்டு முயற்சியால் வெற்றி கிடைத்தது’ - டெல்லி அணியின் பொறுப்பு கேப்டன் தவான் கருத்து
x
தினத்தந்தி 16 Oct 2020 12:12 AM GMT (Updated: 16 Oct 2020 12:12 AM GMT)

கூட்டு முயற்சியால் வெற்றி கிடைத்ததாக, டெல்லி அணியின் பொறுப்பு கேப்டன் தவான் கருத்து தெரிவித்துள்ளார்.

துபாய், 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் துபாயில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 13 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தி 6-வது வெற்றியை ருசித்தது. இதில் டெல்லி நிர்ணயித்த 162 ரன் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து பணிந்தது. 2 விக்கெட் கைப்பற்றிய டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் நோர்டியா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

ஸ்ரேயாஸ் அய்யர் தோள்பட்டை காயத்தால் பாதியில் வெளியேறியதால் டெல்லி அணியின் பொறுப்பு கேப்டனாக செயல்பட்ட ஷிகர் தவான் வெற்றிக்கு பிறகு அளித்த பேட்டியில், ‘கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யருக்கு தோள்பட்டையில் லேசான வலி இருக்கிறது. அவரது காயத்தின் தன்மை குறித்து நாளை தான் தெரியவரும். மிகச்சிறப்பான கூட்டு முயற்சியால் சரிவில் இருந்து மீண்டு வெற்றி பெற்றிருக்கிறோம். ராஜஸ்தான் அணியின் பின்வரிசை பேட்டிங் வலுவாக இல்லை என்பது எங்களுக்கு தெரியும். தொடக்க வரிசை பேட்ஸ்மேன்களை வீழ்த்தினால் ஆட்டம் எங்களுக்கு சாதகமாக அமையும் என்பதை அறிவோம். எங்களது பவுலர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள். சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் நன்றாக பந்து வீசினார். நோர்டியா, ரபடா ஆகிய இருவரும் அருமையான வேகப்பந்து வீச்சாளர்கள். துஷார் தேஷ்பாண்டேவும் அற்புதமாக பந்து வீசினார். அவர் நெருக்கடியான நேரத்திலும் நேர்த்தியாக செயல்பட்டு முக்கியமான விக்கெட்டான பென் ஸ்டோக்சை வீழ்த்தினார்’ என்றார்.


Next Story