கிரிக்கெட்

வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் உத்வேகத்தில் மும்பை + "||" + Mumbai in the spirit of prolonging the journey of success

வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் உத்வேகத்தில் மும்பை

வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் உத்வேகத்தில் மும்பை
வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் உத்வேகத்தில் மும்பை அணி இன்று களமிறங்க உள்ளது.

நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகளை பெற்றுள்ளது. கடைசியாக ஆடிய 4 ஆட்டங்களில் வாகை சூடிய மும்பை அணி வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் முனைப்புடன் உள்ளது. ரோகித் சர்மா, டி காக், பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, பும்ரா, சூர்யகுமார், இஷான் கிஷன், டிரென்ட் பவுல்ட் என்று பெரும் நட்சத்திர பட்டாளத்தை உள்ளடக்கிய மும்பை அணி அசுர பலத்துடன் திகழ்வதால் இன்றைய ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே இதே மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் மும்பை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியிருப்பதால் கூடுதல் நம்பிக்கையுடன் இறங்குவார்கள். ‘அமீரக ஆடுகளங்கள் வேகமின்றி(ஸ்லோ) காணப்பட்டாலும் நாங்கள் தொடர்ந்து வேகப்பந்து வீச்சு தாக்குதலை தொடுக்கவே ஆர்வமாக இருக்கிறோம். இந்த தொடரில் இன்னும் வேகப்பந்து வீச்சாளர்களால் மிகப்பெரிய பங்களிப்பை அளிக்க முடியும். அணி சரியான கலவையில் அமைந்திருப்பதால் வியூகத்தை மாற்ற வேண்டிய தேவையில்லை. வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, பவுல்ட், ஜேம்ஸ் பேட்டின்சன் இதுவரை அற்புதமாக பந்து வீசியிருக்கிறார்கள்’ என்று மும்பை அணியின் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்த்தனே நேற்று தெரிவித்தார்.

முன்னாள் சாம்பியனான கொல்கத்தா அணி 7 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 4-வது இடம் வகிக்கிறது. பேட்டிங்கில் ஓரளவு நல்ல நிலையில் உள்ள கொல்கத்தா அணியில் பந்து வீச்சு தான் சீராக இல்லை. சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி மட்டும் கட்டுக்கோப்புடன் வீசுகிறார். பந்து வீச்சு சர்ச்சையில் சிக்கிய சுனில் நரின் இந்த ஆட்டத்திலும் களம் காணுவது சந்தேகம் தான். பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் கொல்கத்தா வீரர்கள் ஒருங்கிணைந்து அசத்தினால் மட்டுமே மும்பையின் வீறுநடைக்கு முட்டுக்கட்டை போட முடியும். அதை தினேஷ் கார்த்திக் படையினர் செய்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்