டெல்லி அணிக்கு பதிலடி கொடுக்குமா சென்னை?


டெல்லி அணிக்கு பதிலடி கொடுக்குமா சென்னை?
x
தினத்தந்தி 17 Oct 2020 12:21 AM GMT (Updated: 17 Oct 2020 12:21 AM GMT)

3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை ஒருபோதும் இல்லாத வகையில் இந்த சீசனில் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது

சார்ஜா,

3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை ஒருபோதும் இல்லாத வகையில் இந்த சீசனில் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. 8 ஆட்டத்தில் விளையாடி இருக்கும் சென்னை அணி 3 வெற்றி ( மும்பை, பஞ்சாப், ஐதராபாத் அணிகளுக்கு எதிராக ), 5 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. 

சென்னை அணியின் பேட்டிங்கில் டுபிளிஸ்சிஸ், ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இருப்பினும் அவர்கள் ஒருசேர நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் தான் சென்னை அணியால் நிமிர முடியும். ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றல் படைத்த டோனி நல்ல பார்மில் இல்லாமல் திணறுவது சென்னை அணிக்கு பின்னடைவாக இருக்கிறது. 

பந்து வீச்சில் சாம் கர்ரன், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், பியுஷ் சாவ்லா ஆகியோர் நன்றாக செயல்பட்டு வருகிறார்கள். கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை அணி ஐதராபாத்தை வென்றது. அந்த ஆட்டத்தில் சாம் கர்ரன் தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டதுடன், பல புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதுபோல் இந்த ஆட்டத்திலும் புதிய வியூகங்களை எதிர்பார்க்கலாம்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 2 தோல்வியுடன் (ஐதராபாத், மும்பை அணிகளிடம்) 12 புள்ளிகள் பெற்று கம்பீரமாக வலம் வருகிறது. அந்த அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஒருசேர ஜோராக உள்ளது. கடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். அவர் உடல் தகுதி பெற்று இந்த ஆட்டத்தில் ஆடுவாரா? என்பது தெரியவில்லை. 

ஒருவேளை அவர் ஆடவில்லை என்றால் ஷிகர் தவான் கேப்டன் பொறுப்பை கவனிப்பார் என்று தெரிகிறது. ‘சென்னை அணியில் அனுபவம் வாய்ந்த சிறந்த வீரர்கள் உள்ளனர். சிறப்பு வாய்ந்த அந்த அணியை நாங்கள் எளிதாக எடுத்து கொள்ளமாட்டோம்’ என்று டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் நேற்று தெரிவித்தார்.

சென்னைக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் டெல்லி அணி 44 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. அந்த நம்பிக்கையுடம் களம் இறங்கும் டெல்லி அணி வெற்றியை தொடர முயற்சிக்கும். அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பழிதீர்க்க சென்னை அணி போராடும். டெல்லி அணியில் ரபடா (18 விக்கெட்), நோர்டியா (10 விக்கெட்) ஆகியோர் தங்களது அதிவேக வேகப்பந்து வீச்சு மூலம் மிரட்டி வருகிறார்கள். 

சுழற்பந்து வீச்சில் ஆர்.அஸ்வின், அக்‌ஷர் பட்டேல் எதிரணிக்கு குடைச்சல் கொடுக்கிறார்கள். டெல்லி அணியின் அபார பந்து வீச்சை, தடுமாற்றத்துடன் செயல்படும் சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் எப்படி சமாளிக்க போகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். சார்ஜா மைதானம் சிறியது என்பதால் இங்கு ரன் மழைக்கு பஞ்சம் இருக்காது. இங்கு முதலில் பேட்டிங் செய்வது சாதகமானது என்பதால் ஆட்டத்தில் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும்.

Next Story