வீழ்ச்சியில் இருந்து மீளுமா சென்னை சூப்பர் கிங்ஸ்? மும்பை அணியுடன் இன்று மோதல்


வீழ்ச்சியில் இருந்து மீளுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?  மும்பை அணியுடன் இன்று மோதல்
x
தினத்தந்தி 23 Oct 2020 1:48 AM GMT (Updated: 23 Oct 2020 1:48 AM GMT)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சார்ஜா, 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 41-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. சார்ஜாவில் இந்த போட்டி நடைபெறுகிறது.  இரு அணிகளும் இதுவரை 29 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 17 முறை வெற்றி பெற்றுள்ளது. 

மூன்று முறை சாம்பியனான டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 7-ல் தோல்வியும், 3-ல் வெற்றியும் கண்டு புள்ளி பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணியின் மோசமான செயல்பாடாக இந்த ஆண்டு பதிவாகி இருக்கிறது. அது மட்டுமின்றி அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பும் கேள்விக்குறியாகி நிற்கிறது. சென்னை அணி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்றால் முதலில் மீதமுள்ள 4 ஆட்டங்களிலும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். அதன் பிறகு ராஜஸ்தான், ஐதராபாத், பஞ்சாப், கொல்கத்தா அணிகள் தங்களது எஞ்சிய லீக் ஆட்டங்களில் குறைந்தது 2-ல் தோற்க வேண்டும். இவ்வாறு நடந்து ரன்ரேட்டிலும் நல்ல நிலையில் இருந்தால் சென்னை அணிக்கு ‘பிளே-ஆப்’ சுற்று கதவு திறக்கும்.

சென்னை அணியின் பேட்டிங் தொடர்ந்து சீரற்றதாக இருக்கிறது. முந்தைய ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 20 ஓவர்களில் வெறும் 125 ரன்கள் மட்டுமே எடுத்து பணிந்தது. பாப் டு பிளிஸ்சிஸ் (375 ரன்), ஷேன் வாட்சன் (285 ரன்), அம்பத்தி ராயுடு (250 ரன்) ஆகிய டாப் வரிசை பேட்ஸ்மேன்கள் கைவிட்டால் அதன் பிறகு முற்றிலும் நிலைகுலைந்து விடுகிறது. 

கேதர் ஜாதவ் (8 ஆட்டத்தில் 62 ரன்), கேப்டன் டோனியின் (10 ஆட்டத்தில் 164 ரன்) தடுமாற்றம் மிடில்வரிசையை பாழ்படுத்தி விட்டது. 17 வீரர்களை பயன்படுத்தி பார்த்தும் அணிச்சேர்க்கை இன்னும் சரியாக அமையவில்லை. காயத்தால் ஆல்-ரவுண்டர் வெய்ன் பிராவோ விலகி இருப்பது மேலும் ஒரு பின்னடைவாகும். அவருக்கு பதிலாக இம்ரான் தாஹிர், நிகிடி ஆகியோரில் ஒருவர் இடம் பெறலாம். இதேபோல் இளம் வீரர்கள் ஜெகதீசன், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு வாய்ப்பு அளிப்பதையும் டோனி சூசகமாக தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். தொடரின் தொடக்க ஆட்டத்தில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பலம் வாய்ந்த மும்பை இந்தியன்சை தோற்கடித்தது. அந்த ஆட்டத்தில் 163 ரன்கள் இலக்கை சென்னை அணி 4 பந்து மீதம் வைத்து எட்டிப்பிடித்தது. அதன் பிறகு தொடர்ச்சியான தோல்விகளால் துவண்டு போய் உள்ள சென்னை அணி மீண்டும் மும்பையை வீழ்த்தி வெற்றிப்பாதைக்கு திரும்புமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அதே சமயம் நடப்பு சாம்பியனான மும்பை அணியை பொறுத்தவரை பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் வலுமிக்க அணியாக திகழ்கிறது. குயின்டான் டி காக் (4 அரைசதத்துடன் 322 ரன்), கேப்டன் ரோகித் சர்மா (260 ரன்), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டயா, பொல்லார்ட் பேட்டிங்கிலும், ஜஸ்பிரித் பும்ரா, ராகுல் சாஹர், டிரென்ட் பவுல்ட் உள்ளிட்டோர் பந்து வீச்சிலும் மிரட்டுகிறார்கள். 9 ஆட்டங்களில் 6-ல் வெற்றி பெற்றுள்ள மும்பை அணி முந்தைய தோல்விக்கு பழிதீர்க்கும் முனைப்புடன் இருப்பதால் ஆட்டம் விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சிறிய மைதானமான சார்ஜாவில் போட்டி நடப்பதால் பேட்ஸ்மேன்கள் சுதாரிப்போடு விளையாடினால் நிறைய ரன்கள் குவிக்கலாம். சமீபத்திய ஆட்டங்களில் 2-வது பேட் செய்யும் அணிகளே வெற்றி பெறுவதால் ‘டாஸ்’ வெல்லும் அணி 2-வது பேட்டிங்குக்கு முன்னுரிமை அளிக்கும்.

Next Story