ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்
x
தினத்தந்தி 24 Oct 2020 10:48 PM GMT (Updated: 24 Oct 2020 10:48 PM GMT)

முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 ஆட்டங்களில் 8-ல் தோற்று முதல்முறையாக அடுத்த சுற்று வாய்ப்பை இழந்திருக்கிறது.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ்
இடம்: துபாய், நேரம்: மாலை 3.30 மணி விராட் கோலி கேப்டன் டோனி
9 வெற்றி இதுவரை நேருக்கு நேர் 25 (முடிவில்லை1) 15 வெற்றி

பெங்களூருவை சமாளிக்குமா சென்னை?
முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 ஆட்டங்களில் 8-ல் தோற்று முதல்முறையாக அடுத்த சுற்று வாய்ப்பை இழந்திருக்கிறது. இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதால் நெருக்கடி இன்றி விளையாடுவார்கள். ஆனால் புள்ளிபட்டியலில் கடைசி என்ற பரிதாப நிலையை மாற்ற முயற்சிப்பார்கள். மும்பைக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 114 ரன்னில் சுருண்டதும், குறிப்பாக பேட்டிங்குக்கு உகந்த சார்ஜா ஆடுகளத்தில் பவர்-பிளேக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்ததையும் சென்னை ரசிகர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. தொடர்ச்சியான சறுக்கலால் நிலைகுலைந்து திகைத்து போய் நிற்கும் சென்னை அணி சரிவில் இருந்து மீண்டு ஆறுதல் வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதுவரை ஆடும் லெனில் இடம் பெறாத கே.எம்.ஆசிப், சாய் கிஷோர், மிட்செல் சான்ட்னெர் ஆகிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பது குறித்து கேப்டன் டோனி பரிசீலிப்பார்.

10 ஆட்டங்களில் 7-ல் வெற்றி, 3-ல் தோல்வி என்று 14 புள்ளிகளுடன் வலுவாக உள்ள பெங்களூரு அணி இந்த ஆண்டு வீறுநடை போடுகிறது. கேப்டன் விராட் கோலி, டிவில்லியர்ஸ், ஆரோன் பிஞ்ச், தேவ்தத் படிக்கல் ஆகிய டாப்-4 வீரர்களின் பேட்டிங் ஜாலமும், யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் மோரிஸ் ஆகியோரின் கலக்கல் பந்துவீச்சும் பெங்களூரு அணிக்கு முத்தாய்ப்பாக அமைந்துள்ளன. இவர்களின் கை ஓங்கினால், பெங்களூரு அணிக்கு தித்திப்பான முடிவே கிடைக்கும். ஏற்கனவே சென்னை அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ள பெங்களூரு அணி கூடுதல் உற்சாகத்தில் களம் காணும்.

ராஜஸ்தான் ராயல்ஸ்- மும்பை இந்தியன்ஸ்

இடம்: அபுதாபி, நேரம்: மாலை 7.30 மணி

10 வெற்றி
இதுவரை நேருக்கு நேர் 21
11 வெற்றி

ஆதிக்கத்தை நீட்டிக்கும் உத்வேகத்தில் மும்பை
11 ஆட்டங்களில் 4 வெற்றி, 7 தோல்வியை சந்தித்துள்ள ராஜஸ்தான் அணி எஞ்சிய 3 ஆட்டங்களிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். அதன் பிறகு சில அணிகளின் முடிவு சாதகமாக அமைந்தால் பிளே-ஆப் சுற்று வாய்ப்பு கிட்டும். உலகத்தரம் வாய்ந்த அதிரடி வீரர் பென் ஸ்டோக்ஸ் 5 ஆட்டங்களில் களம் கண்டு ஒரு அரைசதம் கூடஅடிக்கவில்லை. அவர் வாணவேடிக்கை காட்டியிருந்தால் சில ஆட்டங்களில் ராஜஸ்தான் வாகை சூடியிருக்கும். ஜோப்ரா ஆர்ச்சர் (15 விக்கெட்) தவிர மற்றவர்களின் பந்து வீச்சு மெச்சும்படி இல்லை. தரமான பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர்களை கொண்டுள்ள ராஜஸ்தான் அணி திறமைக்கு ஏற்ப ஒருங்கிணைந்து ஆடினால் சாதிக்கலாம்.

நடப்பு சாம்பியனான மும்பை அணி 7 வெற்றி, 3 தோல்வி என்று 14 புள்ளிகளுடன் பிளே-ஆப் சுற்றை நெருங்கி விட்டது. பேட்டிங், பந்து வீச்சில் அசுர பலத்துடன் விளங்கும் மும்பை அணி, கடந்த ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை ஊதித்தள்ளியது. டிரென்ட் பவுல்ட், பும்ராவின் பந்து வீச்சு மிரட்டலாக இருந்தது. இந்த புயல்வேக பந்து வீச்சாளர்கள் இருவரும் சேர்ந்து இதுவரை 33 விக்கெட்டுகளை அறுவடை செய்திருக்கிறார்கள். தசைப்பிடிப்பால் முந்தைய ஆட்டத்தில் ஓய்வு எடுத்த மும்பை கேப்டன் ரோகித் சர்மா களம் திரும்புவார் என்று தெரிகிறது. ஒருவேளை உடல்தகுதியை எட்டாவிட்டால் பொல்லார்ட் கேப்டனாக செயல்படுவார். பாண்ட்யா, டி காக், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், பும்ரா, பொல்லார்ட், பவுல்ட் என்று பெரிய நட்சத்திர பட்டாளத்தை உள்ளடக்கிய மும்பை அணியின் ஆதிக்கம் இந்த ஆட்டத்திலும் தொடர அதிக வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே 57 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை சாய்த்தது நினைவு கூரத்தக்கது. நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

Next Story