அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு டோனி தலைமை தாங்குவாரா? சிஎஸ்கே சிஇஓ பேட்டி


அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில்  சென்னை அணிக்கு டோனி தலைமை தாங்குவாரா? சிஎஸ்கே சிஇஓ பேட்டி
x
தினத்தந்தி 27 Oct 2020 8:17 AM GMT (Updated: 27 Oct 2020 8:17 AM GMT)

அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை முழுமையாக மாற்றி அமைக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவின.


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பங்கேற்ற அனைத்து சீசனிலும் பிளே ஆப் சுற்றை எட்டியிருக்கிறது. ஆனால், நடப்பு சீசனில் முதல் முறையாக லீக் சுற்றோடு வெளியேறுகிறது.  மூத்த வீரர்களை கொண்ட சிஎஸ்.கே அணி திறமைக்கு ஏற்ப விளையாடாததே தோல்விக்கு காரணம்  என கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

 கேப்டன் டோனியும் மோசமான பார்மில் உள்ளார். இதனால், அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை முழுமையாக மாற்றி அமைக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவின. 

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி (சிஇஒ) காசி விஸ்வநாதன் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இது குறித்து பேசியுள்ளார். காசி விஸ்வநாதன் கூறுகையில், “ 2021- ஐபிஎல் தொடரிலும் சென்னை அணியை டோனி வழிநடத்துவார் என நான் நிச்சயமாக  நம்புகிறேன். எங்களுக்கு மூன்று ஐபிஎல் கோப்பைகளை அவர் வென்று தந்திருக்கிறார். 

எந்த அணியும் செய்யாத சாதனையாக அனைத்து ஐபிஎல் தொடரிலும் பிளே ஆப் சுற்றுக்கு இதுவரை தகுதி பெற்றுள்ளோம். ஒரு மோசமான ஆண்டு அமைந்துவிட்டால், நாம் அனைத்தையும் மாற்ற வேண்டும் என்று அர்த்தம் இல்லை. எங்கள் திறமைக்கு தகுந்தபடி நடப்பு தொடரில் நாங்கள் விளையாடவில்லை. சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்சிங் விலகியதும் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது” என்றார். 

Next Story