சூர்யகுமாருக்கு இந்திய அணியில் விரைவில் இடம் கிடைக்கும் - மும்பை கேப்டன் பொல்லார்ட் சொல்கிறார்


சூர்யகுமாருக்கு இந்திய அணியில் விரைவில் இடம் கிடைக்கும் - மும்பை கேப்டன் பொல்லார்ட் சொல்கிறார்
x
தினத்தந்தி 29 Oct 2020 11:03 PM GMT (Updated: 29 Oct 2020 11:03 PM GMT)

தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூர்யகுமார் யாதவுக்கு இந்திய அணியில் விரைவில் இடம் கிடைக்கும் என்று மும்பை கேப்டன் பொல்லார்ட் கூறியுள்ளார்.

அபுதாபி,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு அபுதாபியில் நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை வீழ்த்தி 8-வது வெற்றியோடு பிளே-ஆப் சுற்றை உறுதி செய்தது. இதில் தேவ்தத் படிக்கல்லின் (74 ரன்) அரைசதத்தின் உதவியுடன் பெங்களூரு நிர்ணயித்த 165 ரன்கள் இலக்கை மும்பை அணி 5 பந்து மீதம் வைத்து எட்டிப்பிடித்தது. சூர்யகுமார் யாதவ் 79 ரன்கள் (43 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்கு பிறகு மும்பை பொறுப்பு கேப்டன் பொல்லார்ட் கூறுகையில், ‘தொடக்க ஆட்டக்காரர்களின் விக்கெட்டுகளை சீக்கிரம் இழந்த போதிலும் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக இத்தகைய ஸ்டிரைக் ரேட்டில் (அதாவது ஸ்டிரைக் ரேட் 183.72) விளையாடி இருப்பது வியப்புக்குரிய விஷயம். எப்படிப்பட்ட சூழலிலும் மீண்டும், மீண்டும் தான் எப்படிப்பட்ட தரம் வாய்ந்த வீரர் என்பதை தொடர்ந்து நிரூபித்து காட்டி வருகிறார். இலக்கை விரட்டும் போது டாப்-4 பேட்ஸ்மேன்களில் யாராவது ஒருவர் கடைசி வரை நிலைத்து நின்று வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்வது குறித்து பேசுகிறோம். இதை சூர்யகுமார் எங்களுக்காக அடிக்கடி செய்துள்ளார்.

இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாததால் அவர் உண்மையிலேயே மிகவும் ஏமாற்றத்திற்கு உள்ளாகி இருப்பார். அவரது ஆட்டம் நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது. தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அதற்குரிய பலன் கிடைக்கும். இந்திய அணிக்குள் அடியெடுத்து வைக்கும் வாய்ப்பை அவர் மிகவும் நெருங்கி விட்டார்.’ என்றார். 30 வயதான சூர்யகுமார் இந்த சீசனில் 3 அரைசதம் உள்பட 362 ரன்கள் சேர்த்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

தோல்விக்கு பிறகு பெங்களூரு கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘கடைசி கட்டத்தில் எங்களது பேட்டிங் வினோதமாக இருந்தது. நாங்கள் அடித்த பந்துகள் எல்லாம் சரியாக பீல்டர்களின் கைக்கே சென்றது. இறுதி 5 ஓவர்களில் மும்பை பவுலர்கள் (35 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினர்) சரியான அளவில், துல்லியமாக பந்து வீசி கட்டுப்படுத்தினர். இதனால் 20 ரன்கள் வரை நாங்கள் குறைவாக எடுத்து விட்டோம். ஆனாலும் கடைசி வரை போராடினோம்’ என்றார்.

Next Story