ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்
x
தினத்தந்தி 30 Oct 2020 11:36 PM GMT (Updated: 30 Oct 2020 11:36 PM GMT)

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 12 ஆட்டங்களில் 7-ல் வெற்றி, 5-ல் தோல்வி என்று 14 புள்ளிகளுடன் உள்ளது. எஞ்சிய 2 ஆட்டத்தில் ஒன்றில் வெற்றி பெற்றாலே அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறி விடலாம்.

மும்பையை சமாளிக்குமா டெல்லி?
தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் (பஞ்சாப், கொல்கத்தா, ஐதராபாத்துக்கு எதிராக) தோற்று சற்று தொய்வை சந்தித்துள்ள டெல்லி அணி இன்றைய ஆட்டத்திலேயே ‘பிளே-ஆப்’ வாய்ப்பை உறுதி செய்ய தீவிர முனைப்பு காட்டும். டெல்லி அணியின் சீரற்ற பேட்டிங்கே சமீபத்திய தோல்விகளுக்கு காரணம். அடுத்தடுத்து சதம் அடித்து சாதனை படைத்த ஷிகர் தவான் கடைசி இரு ஆட்டத்தில் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், ஹெட்மயர், ஸ்டோனிஸ், ரஹானே உள்ளிட்டோர் ஒருங்கிணைந்து சோபிக்க வேண்டியது அவசியமாகும்.

நடப்பு சாம்பியனான மும்பை அணி 8 வெற்றி, 4 தோல்வி என்று 16 புள்ளிகளுடன் முதலிடம் வகிப்பதுடன் முதல் அணியாக ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் அடியெடுத்து வைத்து விட்டது. புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களுக்குள் நிலை நிறுத்துவதே அந்த அணியின் இப்போதைய நோக்கமாகும். தசைப்பிடிப்பால் அவதிப்படும் கேப்டன் ரோகித் சர்மா இன்றைய ஆட்டத்திலும் விளையாட வாய்ப்பில்லை. பொல்லார்ட் அணியை தொடர்ந்து வழிநடத்துவார். பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் பலம் வாய்ந்த அணியாக உருவெடுத்துள்ள மும்பை இந்தியன்ஸ் நடப்பு தொடரில் அதிக சிக்சர் நொறுக்கிய (107 சிக்சர்) அணியாக விளங்குகிறது. அதே உத்வேகத்துடன் இந்த ஆட்டத்திலும் வாணவேடிக்கை நிகழ்த்த காத்திருக்கிறது. இவ்விரு அணிகளும் ஏற்கனவே சந்தித்த ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


‘பிளே-ஆப்’ சுற்றை உறுதி செய்யும் முனைப்பில் பெங்களூரு அணி
இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 5 தோல்வியுடன் 14 புள்ளிகளை பெற்றுள்ள பெங்களூரு அணிக்கு இன்னும் 2 லீக் ஆட்டங்கள் உள்ளன. இவற்றில் ஒன்றில் வாகை சூடினாலே ‘பிளே-ஆப்’ சுற்றை எட்டிவிட முடியும். முந்தைய இரு ஆட்டங்களில் (சென்னை, மும்பைக்கு எதிராக) தோல்வியை தழுவிய பெங்களூரு அணி, ‘பிளே-ஆப்’ அதிர்ஷ்டத்தோடு வெற்றிப்பாதைக்கு திரும்பும் வேட்கையுடன் ஆயத்தமாகி வருகிறது. அந்த அணியில் இளம் வீரர் தேவ்தத் படிக்கல் (4 அரைசதத்துடன் 417 ரன்), டிவில்லியர்ஸ் (4 அரைசதத்துடன் 339 ரன்), கேப்டன் விராட் கோலி ஆகியோர் சூப்பர் பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் ‘சுழல் சூறவாளிகள்’ யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர் சிக்கனத்தை காட்டுகிறார்கள். ஆனால் வேகப்பந்து வீச்சு தான் அவ்வப்போது சொதப்புகிறது. மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் வாய்ப்பு பெற்ற ஸ்டெயின் 4 ஓவர்களில் 43 ரன்களை வாரி வழங்கினார். வேகப்பந்து வீச்சு கூட்டணி சரியாக அமைந்தால் பெங்களூரு அணி மேலும் வலுவடையும்.

ஐதராபாத் அணியை பொறுத்தவரை (5 வெற்றி, 7 தோல்வியுடன் 10 புள்ளி) தங்களது கடைசி இரு ஆட்டங்களில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். சில அணிகளின் முடிவுகள் சாதகமாக அமைய வேண்டும் என்ற சூழலில் உள்ளது. இன்றைய பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் வீழ்ந்தால் ‘பிளே-ஆப்’ கனவு கலைந்து விடும். கடந்த ஆட்டத்தில் டெல்லிக்கு எதிராக 219 ரன்கள் குவித்து வெற்றி கண்டது ஐதராபாத்தின் நம்பிக்கைக்கு ஊக்கமூட்டுகிறது. ஆனால் அந்த ஆட்டத்தில் 87 ரன்கள் விளாசிய விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா இடுப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தால் அவதிப்படுவது பின்னடைவாகும். அவர் காயத்தில் இருந்து தேறாவிட்டால் ஜானி பேர்ஸ்டோ மீண்டும் விக்கெட் கீப்பிங் பணியை கவனிப்பார். பேட்டிங்கில் வார்னர், மனிஷ் பாண்டே, வில்லியம்சன், பந்து வீச்சில் ரஷித்கான் (17 விக்கெட்), டி.நடராஜன் (13 விக்கெட்), சந்தீப் ஷர்மா (8 விக்கெட்) ஆகியோரைத்தான் ஐதராபாத் அணி அதிகமாக சார்ந்திருக்கிறது. இவர்களின் கை ஓங்கினால் ஐதராபாத்துக்கு உற்சாகமான நாளாக அமையும். ஏற்கனவே பெங்களூருக்கு எதிராக 10 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த ஐதராபாத் அணி இந்த முக்கியமான தருணத்தில் பதிலடி கொடுக்குமா? என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது. சிறிய மைதானமான சார்ஜாவில் இந்த போட்டி நடப்பதால் ரன்மழையை எதிர்பார்க்கலாம்.

Next Story