ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கேப்டன் டோனி பாராட்டு ‘அதிக திறமை கொண்ட இளம் வீரர்’


ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கேப்டன் டோனி பாராட்டு ‘அதிக திறமை கொண்ட இளம் வீரர்’
x
தினத்தந்தி 30 Oct 2020 11:56 PM GMT (Updated: 30 Oct 2020 11:56 PM GMT)

ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் அரைசதம் அடித்து கலக்கிய சென்னை வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டை கேப்டன் டோனி வெகுவாக பாராட்டியுள்ளார்.

துபாய்,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு துபாயில் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை தோற்கடித்தது.

இதில் கொல்கத்தா நிர்ணயித்த 173 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணிக்கு கடைசி 2 பந்தில் 7 ரன் தேவைப்பட்டது. ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா (31 ரன், நாட்-அவுட்) கடைசி இரு பந்தையும் சிக்சருக்கு விரட்டியடித்து வெற்றியை உறுதி செய்தார்.

ஐ.பி.எல். வரலாற்றில் இலக்கை விரட்டும் போது (சேசிங்) கடைசி பந்தில் அதிக முறை வெற்றியை ருசித்த அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் திகழ்கிறது. இந்த வகையில் சென்னை 6 வெற்றியும், மும்பை 5 வெற்றியும் பெற்றுள்ளன.

இந்த ஆட்டத்தில் 72 ரன்கள் குவித்த (53 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டநாயகன் விருது பெற்றார். அதே சமயம் 7-வது தோல்வியை சந்தித்த கொல்கத்தாவின் அடுத்த சுற்று வாய்ப்பு மங்கியுள்ளது. கொல்கத்தாவின் தோல்வியின் மூலம் ‘பிளே-ஆப்’ ரேசில் ஓடும் டெல்லி, பஞ்சாப், பெங்களூரு போன்ற அணிகளுக்கு நெருக்கடி கொஞ்சம் குறைந்துள்ளது.

இந்த ஆட்டத்தில் 4 பந்தில் ஒரு ரன் எடுத்து சொதப்பிய சென்னை கேப்டன் டோனி கூறியதாவது:-

பரபரப்பாக நகர்ந்த கடைசி கட்டத்தில் எங்களுக்கு சாதகமாக முடிந்த ஒரே ஆட்டம் இதுதான். வெற்றிக்குரிய எல்லா பெருமையும் வீரர்களையே சாரும். இந்த சீசன் முழுவதும் ஜடேஜா அருமையாக விளையாடி வருகிறார். இறுதிகட்ட ஓவர்களில் பொறுப்பை எடுத்துக் கொண்டு எங்களுக்காக சிறப்பாக ரன் குவிக்கும் ஒரே வீரர் அவர் தான்.

அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட நிலையில் இதுவரை விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்க விரும்புகிறோம். அந்த வாய்ப்பை அவர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். நம்மிடம் உள்ள இளம் வீரர்களில் அதிகமான திறமை கொண்ட ஒரு வீரர் ருதுராஜ் கெய்க்வாட். அதை அவர் களத்தில் காட்டி விட்டார். ஆரம்பத்தில் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். 20 நாட்கள் கழித்து தான் மீண்டு வந்தார். இது துரதிர்ஷ்டவசமானது என்றாலும் இந்த ஐ.பி.எல். சீசனை அவர் எப்போதும் நினைவில் வைத்திருப்பார்.

மற்றவர்கள் போல் ருதுராஜ் நிறைய பேசமாட்டார். இது தான் சில நேரம் பிரச்சினை. இப்படிப்பட்ட சூழலில் ஒரு வீரரை அணி நிர்வாகத்தால் மதிப்பிடுவது கடினமாகி விடுகிறது. ருதுராஜ் தனது முதலாவது ஆட்டத்தில் முதல் பந்திலேயே கிரீசை விட்டு இறங்கி வந்து விளையாட முயற்சித்து ஆட்டம் இழந்தார். நெருக்கடியால் இவ்வாறு விளையாடினாரா? அல்லது அவரது இயல்பான ஆட்டமே இது தானா? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு பந்தை வைத்து ஒருவரின் திறமையை கணிக்க முடியாது. இப்போது அவர் வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டதை பார்க்கும் போது பரவசமூட்டுகிறது.

இந்த தொடரில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. ஆனால் தொடரில் நம் முக்கியத்துவத்தை இழந்து விடக் கூடாது. ‘உங்கள் விருப்பப்படி எப்படி வேண்டும் என்றாலும் தயார்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால் களத்தில் 3½ மணிநேரம் உங்களது சிறந்த முயற்சியை வெளிப்படுத்துங்கள் போதும்’ என்று வீரர்களிடம் கேட்டுக்கொண்டோம். அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் நிலையில் இல்லை என்றாலும் நிறைய நம்பிக்கையை எடுத்துச் செல்கிறோம். இவ்வாறு டோனி கூறினார்.

ஆட்டநாயகனாக ஜொலித்த 23 வயதான ருதுராஜ் கெய்க்வாட் மராட்டியத்தை சேர்ந்தவர். ரூ.20 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட அவர் கூறுகையில், ‘தொடர்ந்து இரு ஆட்டங்களில் அரைசதம் அடித்து வெற்றிக்கு உதவியது மகிழ்ச்சி அளிக்கிறது. நம்பிக்கையும் வந்துள்ளது. கொரோனா பாதிப்பு என்னை வலிமையானவராக மாற்றியிருக்கிறது. எப்படிப்பட்ட சூழ்நிலை என்றாலும் அதை புன்னகையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று எங்களது கேப்டன் டோனி அடிக்கடி சொல்வார். இது கடினம் தான். ஆனால் அதை பின்பற்ற முயற்சிக்கிறேன். உடற்பயிற்சி கூடத்தில் கடினமாக உழைக்கிறேன். என்னிடம் ‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு உள்ளது’ என்றார்.

Next Story