ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்
x
தினத்தந்தி 1 Nov 2020 12:16 AM GMT (Updated: 2020-11-01T05:46:18+05:30)

13 ஆட்டங்களில் 5 வெற்றி, 8 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ள சென்னை அணி இன்று தனது கடைசி லீக்கில் பஞ்சாப்பை எதிர்கொள்கிறது.

வெற்றியோடு நிறைவு செய்யுமா சென்னை?

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டின் தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தி அமர்க்களமாக தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இடையில் ஏற்பட்ட சறுக்கல், அனுபவ வீரர்களின் சொதப்பலால் தள்ளாடியதுடன் முதல்முறையாக பிளே-ஆப் சுற்று வாய்ப்பையும் பறிகொடுத்தது. 13 ஆட்டங்களில் 5 வெற்றி, 8 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ள சென்னை அணி இன்று தனது கடைசி லீக்கில் பஞ்சாப்பை எதிர்கொள்கிறது. இதில் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் ஒரு இடம் முன்னேற வாய்ப்பு உண்டு. கடந்த இரு ஆட்டங்களில் (பெங்களூரு, கொல்கத்தாவுக்கு எதிராக) ருதுராஜ் கெய்க்வாட்டின் அரைசதங்களும் (65 ரன், 72 ரன்) அதில் கிடைத்த வெற்றிகளும் இளம் வீரர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விஷயமாகும். தொடரையும் வெற்றியுடன் நிறைவு செய்தால் அது சென்னை ரசிகர்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். ஏற்கனவே பஞ்சாப்பை 10 விக்கெட் வித்தியாசத்தில் பந்தாடியுள்ள சென்னை அணி, அவர்களின் ‘பிளே-ஆப்’ கனவுக்கும் ‘ஆப்பு’ வைக்குமா? என்ற எதிர்பார்ப்பே இந்த ஆட்டத்தின் சுவாரஸ்யமான அம்சமாகும்.

பஞ்சாப் அணி 13 ஆட்டங்களில் 6-ல் வெற்றி, 7-ல் தோல்வியுடன் 12 புள்ளிகளை பெற்றிருக்கிறது. பிளே-ஆப் வாய்ப்பில் நீடிக்க இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். அவ்வாறு நடந்து சில ஆட்டங்களின் முடிவு சாதகமாக அமைந்தால் பஞ்சாப்புக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கும். அந்த அணியில் கிறிஸ் கெய்ல் (23 சிக்சருடன் 276 ரன்), கேப்டன் லோகேஷ் ராகுல் (641 ரன்), நிகோலஸ் பூரன் (25 சிக்சருடன் 351 ரன்) உள்ளிட்டோர் சிக்சர் மழை பொழிவதில் கில்லாடிகள். இவர்கள் சென்னை பவுலர்களுக்கு எதிராகவும் கோலோச்சுவார்களா? அல்லது ‘சரண்’ அடைந்து மூட்டையை கட்டுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

உள்ளே யார்? வெளியே யார்?

முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகளுக்கு இதுவே கடைசி லீக் ஆட்டமாகும். தலா 6 வெற்றி, 7 தோல்வி என்று ஒரே நிலைமையில் உள்ள இவ்விரு அணிகளில் ஜெயிக்கும் அணி பிளே-ஆப் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும். தோற்கும் அணி வெளியேறும். இவர்களின் ரன்ரேட் மோசமாக இருப்பதால் மெகா வெற்றி பெற வேண்டியது அவசியமாகும். அதன் பிறகு ஒரு சில ஆட்டங்களின் முடிவு அனுகூலமாக அமைய வேண்டும்.

இவ்விரு அணிகளின் அடுத்த சுற்று வாய்ப்புக்கு முட்டுக்கட்டையாக நிற்கும் அணிகளில் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப்பின் கடைசி லீக் ஆட்டம் இதே தினத்தில் மாலையில் நடப்பது உதவிகரமாக இருக்கும். அதாவது பஞ்சாப்பின் செயல்பாட்டுக்கு தகுந்தபடி கொல்கத்தா, ராஜஸ்தான் அணியினர் தங்களது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள முடியும். மொத்தத்தில் சுப்மான் கில், நிதிஷ் ராணா, இயான் மோர்கன் (கொல்கத்தா), ஸ்டீவன் சுமித், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் (ராஜஸ்தான்) என்று இரு அணிகளிலும் அதிரடி சூரர்கள் அங்கம் வகிப்பதால் ரன்வேட்டைக்கு பஞ்சமிருக்காது. ஏற்கனவே மோதிய ஆட்டத்தில் கொல்கத்தா 37 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியிருந்தது நினைவு கூரத்தக்கது.

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்


Next Story