‘இது எனது கடைசி ஆட்டம் அல்ல’- டோனி


‘இது எனது கடைசி ஆட்டம் அல்ல’- டோனி
x
தினத்தந்தி 1 Nov 2020 11:30 PM GMT (Updated: 1 Nov 2020 11:30 PM GMT)

வெற்றிக்கு பிறகு பேசிய டோனி, ‘பெரும்பாலான அணிகள் சிறப்பாக விளையாடிய சீசனில் இதுவும் ஒன்று. எங்களுக்கு கடினமான ஆண்டாக அமைந்திருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனியிடம் ‘டாஸ்’ ஜெயித்ததும் டி.வி. வர்ணனையாளர், இது சென்னை அணிக்காக நீங்கள் விளையாடும் கடைசி ஆட்டமா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு டோனி நிச்சயம் இல்லை என்று நறுக்கென்று பதில் அளித்தார். இதன் மூலம் டோனி 2021-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியிலும் விளையாடப்போவது உறுதியாகியுள்ளது.

வெற்றிக்கு பிறகு பேசிய டோனி, ‘பெரும்பாலான அணிகள் சிறப்பாக விளையாடிய சீசனில் இதுவும் ஒன்று. எங்களுக்கு கடினமான ஆண்டாக அமைந்திருக்கிறது. நாங்கள் எங்களது முழு திறமைக்கு ஏற்ப செயல்படவில்லை. மிகவும் பின்தங்கிய கடினமான சூழலில் இருந்து மீண்டு கடைசி கட்ட ஆட்டங்களில் வீரர்கள் விளையாடிய விதம் பெருமை அளிக்கிறது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு எப்படி இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு அணிக்குள் நாங்கள் சற்று மாற்றம் செய்ய வேண்டியது அவசியம். அடுத்த ஆண்டு வலுவான அணியாக மீண்டெழுவோம் என்பதே ரசிகர்களுக்கு சொல்லும் தகவல்’ என்றார்.

ஒவ்வொரு ஐ.பி.எல். தொடரிலும் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியிருந்த 3 முறை சாம்பியனான சென்னை அணி முதல்முறையாக இந்த சீசனில் தான் லீக் சுற்றுடன் ‘அவுட்’ ஆகியிருக்கிறது.

அத்துடன் 39 வயதான டோனிக்கும் இந்த தடவை மோசமாக அமைந்து விட்டது. அவர் 14 ஆட்டத்தில் 7 சிக்சருடன் 200 ரன் மட்டுமே எடுத்துள்ளார். ஒரு அரைசதமும் அடிக்கவில்லை. ஆட்டநாயகன் விருதும் பெறவில்லை.

Next Story