ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி அணி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேற்றம் தோல்வி அடைந்த பெங்களூருக்கும் அதிர்ஷ்டம்


ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி அணி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேற்றம்  தோல்வி அடைந்த பெங்களூருக்கும் அதிர்ஷ்டம்
x
தினத்தந்தி 3 Nov 2020 12:18 AM GMT (Updated: 3 Nov 2020 12:18 AM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி அணி பெங்களூருவை வீழ்த்தி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறியது. தோல்வி அடைந்த பெங்களூரு அணி அதிர்ஷ்டவசமாக ரன்ரேட்டில் கொல்கத்தாவை விட முன்னணியில் இருப்பதால் அந்த அணியும் அடுத்த சுற்றை எட்டியது.

அபுதாபி,

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை நெருங்கி விட்ட இந்த கிரிக்கெட் திருவிழாவில் அபுதாபியில் நேற்றிரவு அரங்கேறிய 55-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லி அணியில் மூன்று மாற்றமாக ஹெட்மயர், ஹர்ஷல் பட்டேல், பிரவீன் துபே நீக்கப்பட்டு ரஹானே, அக்‌ஷர் பட்டேல், டேனியல் சாம்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். பெங்களூரு அணியில் நவ்தீப் சைனி, குர்கீரத்சிங்குக்கு பதிலாக ஷிவம் துபே, ஷபாஸ் அகமது இடம் பிடித்தனர். ‘டாஸ்’ ஜெயித்த டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி ஜோஷ் பிலிப்பும், தேவ்தத் படிக்கல்லும் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். பிலிப் 12 ரன்களில் ரபடாவின் பந்து வீச்சில் வீழ்ந்தார். 2-வது விக்கெட்டுக்கு கேப்டன் விராட் கோலி வந்தார். ஸ்கோர் சீரான வேகத்தில் நகர்ந்தது. 13 ரன்னில் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிய விராட் கோலி 29 ரன்னில் (24 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) அஸ்வினின் சுழலில் பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார். 20 ஓவர் கிரிக்கெட்டில் அஸ்வின் பந்தில் கோலி ஆட்டம் இழந்தது இதுவே முதல் முறையாகும்.

இதன் பின்னர் படிக்கல்லுடன், டிவில்லியர்ஸ் இணைந்தார். இவர்கள் பேட்டிங் செய்த விதம், 160 ரன்களை தாண்டும் போல் தென்பட்டது. நிலைத்து நின்று 5-வது அரைசதத்தை பூர்த்தி செய்த படிக்கல் ஸ்கோர் 112 ரன்களை எட்டிய போது அன்ரிச் நோர்டியாவின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். அவர் 50 ரன்களில் (41 பந்து, 5 பவுண்டரி) வெளியேறினார். அதே ஓவரில் கிறிஸ் மோரிசும் (0) நடையை கட்டியதால் ரன்வேகம் தளர்ந்தது.

அடுத்து வந்த ஷிவம் துபே 17 ரன்களும் (11 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்), டிவில்லியர்ஸ் 35 ரன்களும் (21 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து அவுட் ஆனார்கள். 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் நோர்டியா 3 விக்கெட்டுகளும், ரபடா 2 விக்கெட்டும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

அடுத்து 153 ரன்கள் இலக்கை நோக்கி டெல்லி விளையாடியது. தொடக்க வீரர் பிரித்வி ஷா (9) சீக்கிரம் பெவிலியன் திரும்பினாலும் ஷிகர் தவானும், ரஹானேவும் கூட்டணி அமைத்து வேகமாக முன்னேறினர். 12.1 ஓவர்களில் 100 ரன்களை தொட்டது. இவர்கள் ஆடிய விதத்தை பார்த்த போது அந்த அணி சீக்கிரமாக வெற்றி இலக்கை எட்டிவிடும் போல் தோன்றியது.

இந்த ஜோடி பிரிந்ததும் ரன்வேகம் கொஞ்சம் குறைந்து போனது. தவான் 54 ரன்களிலும் (41 பந்து, 6 பவுண்டரி), ரஹானே 60 ரன்னிலும் (46 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) சுழற்பந்து வீச்சில் கேட்ச் ஆனார்கள். கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 7 ரன்னில் ஏமாற்றினார்.

டெல்லி அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 154 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரிஷாப் பண்ட் (8 ரன்), ஸ்டோனிஸ் (10 ரன்) களத்தில் இருந்தனர்.

8-வது வெற்றியை ருசித்த டெல்லி அணி அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) அடியெடுத்து வைத்ததுடன் புள்ளி பட்டியலில் 2-வது இடத்தையும் பிடித்தது. நாளை மறுதினம் நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் மும்பை அணியை டெல்லி சந்திக்கிறது.

டெல்லியிடம் பெங்களூரு அணி தோல்வி அடைந்தாலும் அந்த அணியும் பிளே-ஆப் வாய்ப்பை வசப்படுத்தி விட்டது. அதாவது 17.3 ஓவருக்குள் டெல்லி அணி இலக்கை எட்டியிருந்தால் ரன்ரேட்டில் பெங்களூரு அணி, கொல்கத்தாவுக்கு கீழ் சென்றிருக்கும். ஆனால் டெல்லி அணி 19-வது ஓவரில் தான் வெற்றிக்கனியை பறித்ததால் பெங்களூரு அணி (14 புள்ளி), ரன்ரேட்டில் கொல்கத்தாவை விட (14 புள்ளி) முந்தியே உள்ளது.

இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணி, மும்பையிடம் தோற்றால் கொல்கத்தாவுக்கு ‘பிளே-ஆப்’ அதிர்ஷ்டம் கிடைக்கும். ஐதராபாத் வெற்றி கண்டால் 4-வது அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

Next Story