காயம் சர்ச்சைக்கு மத்தியில் ஐ.பி.எல். போட்டியில் மீண்டும் களம் இறங்கினார், ரோகித் சர்மா


காயம் சர்ச்சைக்கு மத்தியில் ஐ.பி.எல். போட்டியில் மீண்டும் களம் இறங்கினார், ரோகித் சர்மா
x

காயம் சர்ச்சைக்கு மத்தியில் ரோகித் சர்மா ஐ.பி.எல். போட்டியில் மீண்டும் களம் இறங்கினார்.

சார்ஜா,

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மா, இடது காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் கடந்த 4 ஆட்டங்களில் விளையாடவில்லை. இதற்கிடையே ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா சேர்க்கப்படவில்லை. அவரது காயத்தன்மை தீவிரமானது என்றும், மீண்டும் ஒரு முறை காயமடைந்தால் அது அபாயகரமானதாக மாறிவிடக்கூடும் என்றும் தேர்வு கமிட்டி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அணி அறிவிக்கப்பட்ட சமயத்தில் ரோகித் சர்மா வலைபயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டது. இதனால் ரோகித் சர்மாவின் காயம் விவகாரத்தில் சர்ச்சை ஏற்பட்டது. அவரது காயத்தன்மை குறித்து வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று கவாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஐதராபாத்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரோகித் சர்மா திடீரென களம் இறங்கினார். தான் உடல்தகுதியுடன் நன்றாக இருப்பதாக டாஸ் போடும் போது பேசுகையில் குறிப்பிட்டார். ஆனால் இந்த ஆட்டத்தில் அவர் ஜொலிக்கவில்லை. 4 ரன்னில் கேட்ச் ஆகிப்போனார். இவ்வளவு சீக்கிரம் காயத்தில் இருந்து குணமடைந்துவிட்ட அவரை தேர்வு குழுவினர் கண்டுகொள்வார்களா? என்பது தெரியவில்லை.

இந்த போட்டிக்கு சில மணி நேரத்திற்கு முன்பாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி அளித்த பேட்டியில், ‘ரோகித் சர்மா காயத்தில் இருக்கிறார். இல்லாவிட்டால் அவரை போன்ற வீரரை ஏன் தேர்வு செய்யாமல் விடப்போகிறோம். அவர் இந்திய அணியின் துணை கேப்டன் என்பதை மறந்து விடக்கூடாது. அவரது காயத்தன்மை குறித்து நாங்கள் ஆய்வு செய்ய வேண்டும். எப்போது கிரிக்கெட் களம் திரும்புவார் என்பது தெரியாது. அவர் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று விரும்புகிறோம். சிறந்த வீரர்களை விளையாட வைப்பது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கடமை. அவர் காயத்தில் இருந்து தேறினால் விளையாடுவார்.

ரோகித் சர்மாவுக்கு தசைநாரில் கிழிவு ஏற்பட்டுள்ளது. மீண்டும் இது போன்ற காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த காயம் குணமடைய நீண்ட நாள் கூட ஆகலாம். தனது கிரிக்கெட் வாழ்க்கை நீண்ட காலம் கொண்டது. அது ஐ.பி.எல். போட்டியுடனோ அல்லது அடுத்த தொடருடனோ முடிந்து விடக்கூடியது அல்ல என்பது ரோகித் சர்மாவுக்கு தெரியும்’ என்றார்.

Next Story