பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் ஐதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அபுதாபி,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அபுதாபியில் இன்று நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில் புள்ளி பட்டியலில் 3-வது மற்றும் 4-வது இடம் பிடித்த அணிகளான முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இன்று பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் விளையாடும். தோற்கும் அணி போட்டியை விட்டு வெளியேறும்.
அபுதாபியில் இன்று நடக்கும் வெளியேற்றுதல் போட்டிக்கான சுற்றில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி முதலில் பேட் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் விராட் கோலி(6 ரன்கள்) மற்றும் தேவ்தத் படிக்கல்(1 ரன்) அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். ஷிவம் துபே(8) வாஷிங்டன் சுந்தர்(5) நவ்தீப் சயினி(9) ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். பெங்களூரு அணியில் அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 56 ரன்களும், ஆரோன் ஃபின்ச் 32 ரன்களும் எடுத்தனர்.
இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஐதராபாத் அணி விளையாட துவங்கியது. தொடக்க ஆட்டக்காராக களமிறங்கிய டேவிட் வார்னர் 17 ரன்களில் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி ரன் ஏதுமின்றி கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.
அடுத்து வந்த மனீஷ் பாண்டே 24 ரன்களில் கேட்ச் ஆனார். இந்த நிலையில் அணியின் ரன் வேகம் சற்று குறைந்தது. இதற்கடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சன் இறுதி வரை நிலைத்து நின்று ஆடி 50 ரன்கள் குவித்தார். பரபரப்பான இறுதி ஓவரில் ஜேசன் ஹோல்டர் அடித்த பவுண்டரிகள் மூலம் ஐதராபாத் அணி தனது இலக்கை எட்டியது.
19.4 ஓவர்களில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் பெங்களூரு அணி இன்றைய ஆட்டத்தோடு தொடரில் இருந்து வெளியேறுகிறது. இதனை தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை அபுதாபியில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் டெல்லி அணியை ஐதராபாத் அணி எதிர்கொள்ள இருக்கிறது.