ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத்தை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது, டெல்லி


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத்தை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது, டெல்லி
x
தினத்தந்தி 9 Nov 2020 12:58 AM GMT (Updated: 9 Nov 2020 12:58 AM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட் தகுதி சுற்றில் ஐதராபாத்தை வீழ்த்தி டெல்லி அணி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தது.

அபுதாபி, 

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. ‘கிளைமாக்ஸ்’ கட்டத்துக்கு வந்து விட்ட இந்த கிரிக்கெட் திருவிழாவில் மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக இறுதிசுற்றை எட்டியது.

இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் மற்றொரு அணி எது? என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதி சுற்றில் முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது. டெல்லி அணியில் இரு மாற்றமாக பிரித்வி ஷா, டேனியல் சாம்ஸ் நீக்கப்பட்டு பிரவீன் துபே, ஹெட்மயர் இடம் பிடித்தனர். ‘டாஸ்’ ஜெயித்த டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.

டெல்லி அணியின் தொடக்க வரிசையில் மாற்றம் செய்யப்பட்டது. மிடில் வரிசையில் ஆடி வந்த மார்கஸ் ஸ்டோனிஸ், ஷிகர் தவானுடன் இணைந்து தொடக்க வீரராக அடியெடுத்து வைத்தார். இந்த மாற்றத்துக்கு கைமேல் பலன் கிடைத்தது. 3 ரன்னில் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்து அதிரடி காட்டிய ஸ்டோனிஸ், வேகப்பந்து வீச்சாளர் ஜாசன் ஹோல்டரின் ஒரே ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் ஓடவிட்டார். தவானும் மட்டையை சுழட்ட ஸ்கோர் மளமளவென எகிறியது. ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் திரட்டி அமர்க்களப்படுத்தினர்.

வலுவான அஸ்திவாரம் அமைத்து தந்த இந்த ஜோடியை சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் பிரித்தார். ஸ்கோர் 86 ரன்களை எட்டிய போது (8.2 ஓவர்) ஸ்டோனிஸ் (38 ரன், 27 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) ரஷித்கான் சுழலில் கிளீன் போல்டு ஆனார். அடுத்து கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் வந்தார். 9.4 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை தொட்டது. ஐதராபாத்தின் சொதப்பல் பீல்டிங்கும் டெல்லி பேட்ஸ்மேன்களுக்கு வசதியாக போனது.

இதன் பின்னர் ரஷித்கான், வேகப்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த டி.நடராஜன் ஆகியோர் சாதுர்யமாக பந்துவீசியதால் அடுத்த சில ஓவர்களில் ரன்விகிதம் கொஞ்சம் தளர்ந்தது. ஸ்ரேயாஸ் அய்யர் 21 ரன்களில் (20 பந்து, ஒரு பவுண்டரி) கேட்ச் ஆனார்.

இதையடுத்து ஹெட்மயர், தவானுடன் இணைந்தார். ஹோல்டரின் ஒரே ஓவரில் இருவரும் சேர்ந்து 4 பவுண்டரிகளை தெறிக்க விட்டனர். இதனால் ஸ்கோர் சற்று வேகமெடுத்தது. 19-வது ஓவரின் போது, தவான் 78 ரன்களில் (50 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) எல்.பி.டபிள்யூ. ஆனார். ரீப்ளேயில் பந்து ஸ்டம்பை விட்டு விலகி செல்வது தெரிந்தது. டி.ஆர்.எஸ். முறைப்படி தவான் அப்பீல் செய்திருந்தால் தப்பியிருப்பார். ஆனால் அது பற்றி அவர் யோசிக்ககூட இல்லை. நடப்பு தொடரில் 600 ரன்களை (16 ஆட்டத்தில் 603 ரன்) கடந்த 2-வது வீரர் என்ற சிறப்போடு நடையை கட்டினார்.

20 ஓவர் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட்டுக்கு 189 ரன்கள் குவித்தது. ஒரு கட்டத்தில் டெல்லி அணி 200 ரன்களை சுலபமாக தாண்டும் என்று கணிக்கப்பட்ட நிலையில், ஐதராபாத் பவுலர்கள் 2-வது பகுதியில் கட்டுப்படுத்தி விட்டனர். கடைசி 2 ஓவர்களில் பந்து எல்லைக்கோடு பக்கமே செல்லவில்லை. ஹெட்மயர் 42 ரன்களுடனும் (22 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), ரிஷாப் பண்ட் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

அடுத்து 190 ரன்கள் இலக்கை நோக்கி ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டேவிட் வார்னரும், பிரியம் கார்க்கும் இறங்கினர். இந்த முறை வார்னர் (2 ரன்) சோபிக்கவில்லை. ரபடா வீசிய யார்க்கர் பந்து அவரது காலில் பட்டு ஸ்டம்பை தாக்கியது. பிரியம் கார்க் (17 ரன்), மனிஷ் பாண்டே (21 ரன்), ஜாசன் ஹோல்டர் (11 ரன்) சீரான இடைவெளியில் வெளியேறினர்.

இதற்கு மத்தியில் கேன் வில்லியம்சன் அணியை தூக்கி நிறுத்த போராடினார். ரபடா, அக்‌ஷர் பட்டேல், ஸ்டோனிஸ் உள்ளிட்டோரது ஓவர்களில் சிக்சர் பறக்க விட்டார். அவருக்கு அப்துல் சமாத் ஒத்துழைப்பு கொடுக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றியது. முக்கியமான தருணத்தில் அதாவது ஸ்கோர் 147 ரன்களாக உயர்ந்த போது வில்லியம்சன் (67 ரன், 45 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) கேட்ச் ஆகிப்போனார்.

தொடர்ந்து சமாத் 33 ரன்களிலும் (16 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), ரஷித்கான் 11 ரன்னிலும், கோஸ்வாமி ரன் இன்றியும் ரபடாவின் ஒரே ஓவரில் (ஆட்டத்தின் 19-வது ஓவர்) காலியானார்கள். அத்துடன் ஆட்டம் முழுமையாக டெல்லி பக்கம் திரும்பியது.

20 ஓவர்களில் ஐதராபாத் அணியால் 8 விக்கெட்டுக்கு 172 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் டெல்லி அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ரபடா 4 விக்கெட்டும், ஸ்டோனிஸ் 3 விக்கெட்டும் சாய்த்தனர். ஐ.பி.எல். வரலாற்றில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ள டெல்லி அணி நாளை (செவ்வாய்க் கிழமை) இரவு 7.30 மணிக்கு துபாயில் அரங்கேறும் மகுடத்துக்கான ஆட்டத்தில் மும்பை இந்தியன்சுடன் மோத உள்ளது.

Next Story