‘ஆஸ்திரேலிய தொடரில் 3 டெஸ்டில் விராட்கோலி ஆடாதது ஏமாற்றம் அளிக்கிறது’ - ஸ்டீவ் வாக் கருத்து


‘ஆஸ்திரேலிய தொடரில் 3 டெஸ்டில் விராட்கோலி ஆடாதது ஏமாற்றம் அளிக்கிறது’ - ஸ்டீவ் வாக் கருத்து
x
தினத்தந்தி 10 Nov 2020 10:50 PM GMT (Updated: 10 Nov 2020 10:50 PM GMT)

ஆஸ்திரேலிய தொடரில் 3 டெஸ்டில் விராட்கோலி ஆடாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் கருத்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

இந்திய கிரிக்கெட் அணி இந்த மாதம் முதல் ஜனவரி வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. முதலாவது ஒருநாள் போட்டி சிட்னியில் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. 

இந்திய அணியின் கேப்டன் விராட்கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு ஜனவரி முதல் வாரத்தில் குழந்தை பிறக்க இருப்பதால் அவர் அடிலெய்டில் டிசம்பர் 7-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டி முடிந்ததும் நாடு திரும்புகிறார். அடுத்த 3 டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் கருத்து தெரிவிக்கையில், ‘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டியில் விராட்கோலி விளையாடமாட்டார் என்பது லேசான ஏமாற்றமும், ஆச்சரியமும் அளிக்கிறது. இந்த தொடர் விராட்கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது என்றாலும் குடும்பத்திற்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். விராட்கோலி இல்லாதது டெஸ்ட் போட்டி தொடரில் விறுவிறுப்பை குறைக்கக்கூடும். 

2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித் இல்லாத போது இந்திய அணி வெற்றி பெற்றதை போன்று தான் இருக்கும். குறிப்பாக இதுபோன்ற பெரிய போட்டி தொடரில் நீங்கள் சிறந்த அணிக்கு எதிராக வெற்றி பெற வேண்டும்’ என்றார்.

Next Story