கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 5-வது முறையாக சாம்பியன்: ‘எங்களது திட்டத்தை பந்து வீச்சாளர்கள் நிறைவாக செயல்படுத்தினார்கள்’ - கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு + "||" + IPL 5th time champion in cricket: ‘The bowlers implemented our plan to the fullest’ - Captain Rohit Sharma praised

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 5-வது முறையாக சாம்பியன்: ‘எங்களது திட்டத்தை பந்து வீச்சாளர்கள் நிறைவாக செயல்படுத்தினார்கள்’ - கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 5-வது முறையாக சாம்பியன்: ‘எங்களது திட்டத்தை பந்து வீச்சாளர்கள் நிறைவாக செயல்படுத்தினார்கள்’ - கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு
‘எங்களது திட்டத்தை பந்து வீச்சாளர்கள் நிறைவாக செயல்படுத்தினார்கள்’ என்று சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பாராட்டினார்.
துபாய், 

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், துபாயில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சை சாய்த்து 5-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை உச்சிமுகர்ந்தது. அந்த அணி ஏற்கனவே 2013, 2015, 2017, 2019-ம் ஆண்டுகளிலும் ரோகித் சர்மா தலைமையில் மகுடம் சூடியிருந்தது.

இறுதி ஆட்டத்தில் டெல்லி நிர்ணயித்த 157 ரன் இலக்கை மும்பை அணி 18.4 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 51 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 68 ரன்கள் விளாசினார். 4 ஓவர்கள் வீசி 30 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்திய மும்பை வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டுக்கான பரிசுத்தொகை பாதியாக குறைக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் முதலில் தெரிவித்து இருந்தது. இதற்கு அணி நிர்வாகங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து கிரிக்கெட் வாரியம் தனது முடிவை கடைசி நேரத்தில் மாற்றிக்கொண்டது. சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணிக்கு ரூ.20 கோடியும், 2-வது இடம் பிடித்த டெல்லி அணிக்கு ரூ.12½ கோடியும் பரிசாக அளிக்கப்பட்டது.

மேலும் மிகவும் மதிப்பு மிக்க வீரர் (தொடர்நாயகன்) விருது ராஜஸ்தான் ராயல்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சருக்கும், வளர்ந்து வரும் இளம் வீரருக்கான விருது பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல்லுக்கும் (5 அரைசதத்துடன் 473 ரன்கள்), ஆட்டத்தின் போக்கை மாற்றும் வீரருக்கான விருது பஞ்சாப் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுலுக்கும், சூப்பர் ஸ்டிரைக்கருக்கான விருது மும்பை அதிரடி வீரர் பொல்லார்ட்டுக்கும் (ஸ்டிரைக் ரேட் 191.42), அதிக சிக்சர் அடித்தவருக்கான விருது மும்பை வீரர் இஷான் கிஷனுக்கும் (30 சிக்சர்), பவர்-பிளேயில் சிறப்பாக செயல்பட்டதற்கான சக்தி வாய்ந்த வீரர் விருது மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட்டுக்கும் (பவர்-பிளேயில் 15 விக்கெட்), அதிக விக்கெட் வீழ்த்தியவருக்கான ஊதா நிற தொப்பி விருது டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடாவுக்கும் (30 விக்கெட்), அதிக ரன் குவித்தவருக்கான ஆரஞ்சு நிற தொப்பி விருது பஞ்சாப் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுலுக்கும் (670 ரன்கள்), ‘பேர் பிளே’ விருது மும்பை அணிக்கும் வழங்கப்பட்டன.

ரோகித் சர்மா கருத்து

வெற்றிக்கு பிறகு மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில் கூறியதாவது:-

இந்த போட்டி தொடர் முழுவதும் நாங்கள் ஆடிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. வெற்றி பெறுவதை ஒரு பழக்கமாக மாற்ற வேண்டும் என்று விரும்புகிறோம் என்று தொடரின் தொடக்கத்திலேயே தெரிவித்து இருந்தோம். இதற்கும் மேலாக வீரர்களிடம் இருந்து எதனை எதிர்பார்க்க முடியும். தொடரின் முதல் பந்தில் இருந்து தற்போது வரை எங்களது குறிக்கோளில் சரியாக இருந்தோம். நாங்கள் சிறப்பாக செயல்பட திரைமறைவில் இருந்து பணியாற்றிய பயிற்சியாளர்கள் உள்ளிட்ட குழுவினருக்கே இதன் நிறைய பெருமைகள் சாரும்.

ஐ.பி.எல். தொடங்குவதற்கு முன்பே நாங்கள் எங்களுடைய தயார்படுத்துதல் பணியை தொடங்கி விட்டோம். என்ன தவறு செய்கிறோம். எதில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம் என்பது குறித்து அவ்வப்போது ஆய்வு செய்தோம். சரியான கலவையிலான அணியை தேர்வு செய்து விட்டு கேப்டன் அமைதியாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும். குச்சியை வைத்து மிரட்டி யாரையும் வேலை வாங்கும் கேப்டன் நான் அல்ல. வீரர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் தான் கேப்டன் செயல்பட வேண்டும். எங்களது பேட்டிங்கை பொறுத்தமட்டில் ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா, பொல்லார்ட் ஆகியோரை வெவ்வேறு வரிசையில் பயன்படுத்தினோம். அதுபோல் போல் தான் பவுலர்களையும் மாற்றி, மாற்றி உபயோகப்படுத்தினோம். எங்களது அந்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது. இறுதிப்போட்டியில் எதிர்பாராதவிதமாக ராகுல் சாஹருக்கு வாய்ப்பு அளிக்க முடியவில்லை. யுக்தி ரீதியாக ஜெயந்த் யாதவ் அணிக்கு தேவைப்பட்டார். சிறந்த அணியை உருவாக்குவதற்காக ஆடும் லெவனை மாற்றும் போது அது யாரையும் பெரிய அளவில் பாதிக்காத வகையில் பார்த்து கொள்ள வேண்டும். முதல் பந்திலேயே நாங்கள் விக்கெட்டை வீழ்த்தினோம். அடுத்து உடனடியாக மேலும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினோம். அந்த நெருக்கடியை தொடர வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். பந்து வீச்சாளர்கள் எங்களது திட்டத்தை நிறைவாக செயல்படுத்தினார்கள். இந்த சீசனில் எங்களது பந்து வீச்சாளர்கள் அனைவரும் நேர்த்தியாக செயல்பட்டனர்.

‘விக்கெட் தியாகம்’

இஷான் கிஷன் நாங்கள் விரும்பிய மாதிரி களத்தில் அபாரமாக செயல்பட்டார். சூர்யகுமார் யாதவ் சூப்பர் பார்மில் இருந்தார். அவருக்காக நான் எனது விக்கெட்டை தியாகம் செய்து இருக்க வேண்டும். அவரது செயலை (ரோகித் சர்மாவுக்காக, சூர்யகுமார் யாதவ் ரன்-அவுட் ஆனார்) நான் மிகவும் பாராட்டுகிறேன். அது மாதிரி செய்வது எளிதான காரியம் அல்ல. அவர்கள் இருவருக்கும் (இஷான் கிஷன், சூர்யகுமார்) நீங்கள் இதுபோல் உத்வேகமும், நம்பிக்கையும் அளித்தால் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். டெல்லி அணியின் பிரதான பவுலர் அஸ்வின். அவர்களுடைய முக்கியமான பவுலர்களுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் தான் அவரது பந்து வீச்சை அடித்து ஆடினேன். இதுபோன்ற ரன் விரட்டலின் (சேசிங்) போது நல்ல தொடக்கம் காண வேண்டியது முக்கியமாகும். வலுவான தொடக்கம் ஏற்படுத்தி விட்டால் பின்னால் வரும் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி இருக்காது. எனவே தான் முதல் 3-4 ஓவர்களில் அதிரடி காட்டினோம். மற்ற படி எந்த வீரரின் பந்து வீச்சுக்கு எதிராகவும் திட்டமிட்டு செயல்படவில்லை.

ரசிகர்கள் தான் எங்களை அதிகம் ஊக்குவிக்கக்கூடியவர்கள். துரதிர்ஷ்டவசமாக இந்த முறை ரசிகர்கள் இல்லாத நிலை ஏற்பட்டு விட்டது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் ஆட முடியாததை இழப்பாக உணர்கிறேன். இந்த போட்டி பாதுகாப்பாகவும், சிறப்பாகவும் நடைபெற அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்த எல்லா தரப்பினருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த போட்டி தொடர் நாட்டு மக்களின் மனதில் மகிழ்ச்சியை கொண்டு வரும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

இரண்டு லீக், முதலாவது தகுதி சுற்று, இறுதிப்போட்டி என்று இந்த சீசனில் மும்பையிடம் டெல்லி அணி 4 முறை உதைவாங்கிவிட்டது. தோல்விக்கு பிறகு டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் ‘பணிச்சுமையால் ஏற்பட்ட சோர்வு காரணமாக எங்களது பவுலர்கள் ‘பவர்- பிளே’யில் நன்றாக செயல்பட முடியாமல் போய் இருக்கலாம் என்று நினைக்கிறேன். முதலில் பேட்டிங் செய்ய எடுத்த முடிவை சரியானதாகவே கருதுகிறேன். இறுதிப்போட்டியில் நல்ல தொடக்கம் காண வேண்டியது முக்கியமானதாகும். அதை செய்ய தவறி விட்டோம். நாங்கள் தொடக்கத்தில் 3 விக்கெட்டுகளை இழந்ததால் ரன் எடுக்க வேண்டியதுடன், விக்கெட்டை இழக்காமல் இருப்பதும் தேவையானதாக இருந்தது. பவர்-பிளேயில் தேவையான அளவுக்கு ரன்கள் சேர்த்தோம். 15-வது ஓவர் வரை நாங்கள் கவுரவமான ஸ்கோரை எட்டியதாக நினைக்கிறேன். அதன் பிறகு சரிவை சந்தித்தோம்.

தோல்வி அடைந்தாலும் இந்த சீசனில் எங்கள் அணியின் பயணம் மகத்தானது. எங்கள் வீரர்களை நினைத்து பெருமிதம் அடைகிறேன். ஐ.பி.எல்.-ல் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது என்பது எளிதான காரியமல்ல. இது மிகப்பெரிய சாதனையாகும். ஐ.பி.எல். கோப்பையை வெல்வது இன்னும் ஒருபடி மேலானதாகும். அடுத்த முறை கோப்பையை வெல்ல வலுவாக திரும்பி வருவோம்’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். கிரிக்கெட்: 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற்றது.
2. ஐ.பி.எல். கிரிக்கெட்; ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 148 ரன்கள் இலக்கு
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 147 ரன்கள் எடுத்துள்ளது.
3. ஐ.பி.எல். கிரிக்கெட்: வெற்றிக்கணக்கை தொடங்குமா ஐதராபாத்?
தனது தொடக்க ஆட்டத்தில் கடைசி பந்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சுக்கு இதே சென்னை சேப்பாக்கத்தில் வைத்து அதிர்ச்சி அளித்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி அந்த வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் முனைப்புடன் உள்ளது.
4. ஐ.பி.எல். கிரிக்கெட்: 10 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றது.
5. ஐ.பி.எல். கிரிக்கெட்: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றிபெற்றது.