இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி அறிவிப்பு


இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி அறிவிப்பு
x
தினத்தந்தி 12 Nov 2020 11:12 PM GMT (Updated: 12 Nov 2020 11:12 PM GMT)

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் உள்ளூர் கிரிக்கெட்டில் கலக்கிய புதுமுக வீரர்கள் புகோவ்ஸ்கி, கேமரூன் கிரீன் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

சிட்னி, 

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2 மாத கால சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் இரவு துபாயில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டது. துறைமுக நகரான சிட்னியை நேற்று சென்றடைந்த இந்திய வீரர்கள் சிட்னி நகரில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் சிட்னி ஒலிம்பிக் பார்க் பகுதியில் உள்ள புல்மேன் ஓட்டலில் தங்கவைக்கப்பட்டனர். அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தும் நடைமுறையை முடித்ததும் சிட்னி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடுவார்கள். தனிமைப்படுத்துதல் காலக்கட்டத்தில் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும். இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்களில் பெரும்பாலானவர்கள் ஐ.பி.எல். போட்டியில் ஆடியவர்கள். அதே சமயம் டெஸ்ட் அணியில் மட்டும் அங்கம் வகிக்கும் ரோகித் சர்மா தாயகம் திரும்பி, ஓரிரு வாரங்கள் கழித்து ஆஸ்திரேலியாவுக்கு கிளம்புவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விராட் கோலி தனது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் முதலாவது டெஸ்ட் முடிந்ததும் இந்தியா திரும்பி விடுவார். ஆஸ்திரேலியாவுக்கு வருகை தருபவர்கள் கட்டாயம் 14 நாட்கள் கொரோனா தடுப்பு தனிமைப்படுத்துதலை கடைப்பிடிக்க வேண்டி உள்ளதால் கோலி அதன் பிறகு கடைசி கட்ட டெஸ்டுக்கான அணியுடன் இணைய வாய்ப்பில்லை.

இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் மூன்று ஒரு நாள் போட்டிகள் (நவ.27, நவ.29, டிச.2) மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் (டிச.4, டிச.6, டிச.8) விளையாடுகிறது. குறுகிய வடிவிலான போட்டிகள் நிறைவடைந்ததும் இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் டிசம்பர் 17-ந்தேதி பகல்-இரவு ஆட்டமாக தொடங்குகிறது.

இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 17 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. டிம் பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் வில் புகோவ்ஸ்கி, கேமரூன் கிரீன் ஆகிய புதுமுக வீரர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

22 வயதான வில் புகோவ்ஸ்கி உள்ளூர் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் ரன்மழை பொழிந்து வருகிறார். ஷெப்பீல்டு கோப்பைக்கான 4 நாள் கிரிக்கெட்டில் விக்டோரியா அணிக்காக தொடக்க வீரராக இறங்கி அடுத்தடுத்த ஆட்டங்களில் இரட்டை சதம் (255 ரன், 202 ரன்) விளாசினார். இந்த போட்டியில் 1997-98-ம் ஆண்டுக்கு பிறகு அடுத்தடுத்து இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சிறப்பை பெற்றார்.

இதே போல் 21 வயதான கேமரூன் கிரீன் பேட்டிங் மட்டுமின்றி மிதவேகமாக பந்தும் வீசக்கூடியவர். ‘ஆஸ்திரேலியாவின் அடுத்த ரிக்கிபாண்டிங்’ என்று வர்ணிக்கப்படும் கிரீன் சமீபத்தில் நியூ சவுத்வேல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மேற்கு ஆஸ்திரேலிய அணிக்காக களம் கண்டு 197 ரன்கள் குவித்து இருந்தார். இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணிக்கு அவர் ஏற்கனவே தேர்வாகி இருப்பது கவனிக்கத்தக்கது.

உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து தடுமாறினாலும் ஜோ பர்ன்ஸ் (5 இன்னிங்சில் 57 ரன்) இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். ஆனால் டேவிட் வார்னருடன் தொடக்க வீரராக களம் காணும் வாய்ப்பு கிடைக்குமா? என்பது சந்தேகம் தான்.

அதே சமயம் ஏற்கனவே ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் சீன் அப்போட், மைக்கேல் நேசர், சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்வெப்சன் முதல்முறையாக டெஸ்ட் அணிக்கு தேர்வாகியுள்ளனர்.

ஆஸ்திரேலிய தேர்வு குழு தலைவர் டிரெவேர் ஹான்ஸ் கூறுகையில், ‘ஆஸ்திரேலிய டெஸ்ட் மற்றும் ஏ அணி தேர்வுக்கான போட்டியில் நிறைய இளம் வீரர்கள் அணிவகுத்து நிற்பது நல்ல அறிகுறியாகும். இதில் புகோவ்ஸ்கி, கேமரூன் கிரீன் குறிப்பிடத்தக்கவர்களாக உள்ளனர். ஒதுக்க முடியாத அளவுக்கு அவர்களின் ஆட்டத்திறன் அபாரமாக இருக்கிறது. அவர்களை போன்ற இளம் வீரர்களை வலுவான அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு சேர்த்து இருப்பது திருப்தி அளிக்கிறது’ என்றார்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி வருமாறு:- டிம் பெய்ன் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித், மார்னஸ் லபுஸ்சேன், டிராவிஸ் ஹெட், ஜோ பர்ன்ஸ், புகோவ்ஸ்கி, கேமரூன் கிரீன், மேத்யூ வேட், மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட், ஜேம்ஸ் பேட்டின்சன், மைக்கேல் நேசர், சீன் அப்போட், நாதன் லயன், மிட்செல் ஸ்வெப்சன்.

இந்தியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய ஏ அணியிலும் டிம் பெய்ன், புகோவ்ஸ்கி, கேமரூன் கிரீன், சீன் அப்போட், ஜோ பர்ன்ஸ், டிராவிஸ் ஹெட், பேட்டின்சன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

Next Story